பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

299


பூங்குன்றன். ஓர் உலகம் என்னும் கருத்து அறிவியல் பூத்துக் குலுங்கிய பின்னர் மேற்றிசை நாட்டில் தோன்றிய கருத்து. இன்னும் சொல்லப் போனால் அச்சத்தில் தோன்றிய கருத்து. ஆனால் கணியன் பூங்குன்றன் அன்பு தழுவிய நிலையில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடுகின்றான். "எல்லா ஊர்களும் என்னுடைய ஊர். எல்லாரும் என்னுடைய சுற்றத்தார்" என்ற கணியன் பூங்குன்றன் பிறந்த மண்ணில் இன்றைக்கு ஜாதி, குலம் போன்ற வேற்றுமைகள் பிரிந்து வளர்ந்து வருகின்றன.

பழைய காலத்தில் சாதி வேற்றுமைகள் இருந்ததுண்டு. ஆனாலும் அந்த வேற்றுமைகள் நெகிழ்ந்து கொடுத்தன. இன்று அவை நெகிழ்ந்து கொடுக்காமல் இறுக்கமடைந்து வருகின்றன என்பதை அன்பு கூர்ந்து எண்ணிப் பாருங்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருவள்ளுவர்,

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”

என்று சொன்னார். பிறப்பில் உயிர்களிடையே வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்று சொன்னார். அதையே வழி மொழிந்த அப்பரடிகள், "இந்த நாட்டில் சாதி இல்லை. சாதிகளைச் சொல்பவர்கள் சழக்கர்கள்” என்று மிகக் கடுமையாகச் சாடினார்.

எல்லோருக்கும் மேலாகப் புரட்சி பூத்த மண்ணாகிய பசும்பொன் மாவட்டத்துத் திருக்கோட்டியூர் மதில் மேல் ஏறி ஒரு பெருந்தகை உபதேசித்தார். மந்திரத்தை எல்லா மக்களுக்கும் வாரிக் கொடுத்தார். அவருடைய ஆச்சாரியன் "இந்த மந்திரத்தை நீ மற்றவர்களுக்குச் சொன்னால் நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொன்னார். "கோடானுகோடிப் பேர் வைகுந்தத்துக்குப் போகும்போது நான் நரகத்திற்குப் போனால் என்ன?” என்று இராமாநுசர் கேட்டார். அந்த இராமாநுசர் பிறந்த மண்ணில் இன்றைக்குச் சுயநலமே வளர்ந்து வருகிறது. பிறர் நலம் குறைந்து வருகிறது.