பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

302

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயர்ந்தது. பதவிகளும், பெருமையும் வரலாம் - போகலாம். இலட்சியத்தைத் தியாகம் செய்துவிட்டுத் தயவு செய்து பதவிகளைத் தேடவேண்டாம். பெருமைகளைத் தேடவேண்டாம்.

இளைய பாரதமே! எழுந்திரு! புதிய பாரதமே! எழுந்து வா; உனக்குத் தேவையான கல்வி எது என்று நிர்ணயம் செய்! தற்சார்பான கல்வியைப் பெறு! வேலையைத் தேடாதே! வேலையை உருவாக்கு! கை வருந்தி உழைப்பவர் தெய்வம் என்று நம்பு! நோன்பு நோற்று உழைத்து வாழ்க! புதிய வரலாறு படைத்திடுக! வரலாற்றுப் போக்கோடு ஒடி விடலாம் என்று நினைக்காதே! நீ வரலாற்றை நிகழ்த்தி, நின்று போராடிப் புதிய வரலாற்றைப் படைத்து சாதனை செய்! உன்னுடைய காலம் இந்த நாட்டினுடைய வரலாற்றில் பொன்ணேடாக அமைய வேண்டும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? அன்பு கூர்ந்து சிந்தனை செய்யுங்கள். இன்று இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது? எங்குப் பார்த்தாலும் வன்முறைகள்! மொழிச் சண்டைகள்! சாதிச் சண்டைகள்! மதச் சண்டைகள்! ஏதோ ஒன்றைத் தேடிக் கொண்டு அவல மனத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார்கள். யாருக்கும் திருப்தியில்லை. எங்கும் அதிருப்தி! இதற்கென்ன மாற்று? இதற்கென்ன வழி? இதற்கு யார் வழி சொல்ல முடியும்? வேறுயாறும் சொல்ல முடியாது.

இளைய பாரதம் ஒன்றுதான் சொல்ல முடியும். அவர்கள் எழுந்தால், எழுந்து நடந்தால், அவர்களால் இந்த நாட்டுக்கு வெற்றி வாய்ப்புக்களை, குவிக்க முடியும். புதிய வரலாற்றைப் படைக்க முடியும். புதிய பாரதம் பொலிவோடு விளங்கும். அதை நினைத்து, எண்ணிப் பார்த்து, முடிவு செய்வதற்காக எங்கே போகின்றோம் என்று சிந்தனை செய்யுங்கள்! எங்கே போக வேண்டும் என்று முடிவு செய்யுங்கள்! போக வேண்டிய இடத்திற்கு, போகவேண்டிய