பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

311


வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது. ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு.

இச்சமூகத்தில் இன்று கல்வித் துறையிலிருந்து காவல் துறை வரையில் ஆண், பெண், பிரிக்கப்படுகின்றனர். ஏன் இந்த அவலம்? இந்த அவலத்தை முதலில் செய்தது ஆண் ஆதிக்கச் சமுதாய அமைப்பு. திருக்கோயிலில் அம்மை அப்பனாக இருந்து வழிபடும் பொருளை அர்த்தநாரீசுவரனாக இருந்த பரம்பொருளை இருவேறாகப் பிரித்துத் தனித்தனியாக்கினார்கள்.

அதற்குப் பிறகுதான் புராணங்களில் கூட ஆண் சாமிக்கும், பெண் சாமிக்கும் சண்டைகள் தொடங்கின. இன்னும் அதே திசையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். ஆண், பெண் சமத்துவத்தைக் கல்வியில்கூடக் காண முடியவில்லை. ஏன்? பண்பாட்டு வளர்ச்சிக்குரிய கல்வியை வழங்காததுதான் காரணம். வளரும் வரலாற்றுக்குரிய உயிர்ப்புள்ள கல்வியை மனிதனுக்குத் தரவேண்டும்.

கல்வி, தெரியாததைத் தெரிந்து கொள்வதற்கு மட்டுமன்று. கல்வி, ஆன்மாவின் சக்தியைத் துாண்ட வேண்டும். நல்ல காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது! நல்ல காரியங்களைச் செய்யும் ஆர்வத்தைத் தரவேண்டும். ஓர் ஊர், ஒரு நாடு எப்படி இருக்கிறது என்பதை அளந்தறியப் பயன்படுவது கல்வியேயாம். ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர்களுடைய நாடு விளங்குமானால் "கெட்ட போர்” அங்கு இராது. ஆன்ற கல்வி கற்றோர் நல்லவராயிருப்பர். நாடும் நன்றாகவே இருக்கும்.

“எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே”

என்பது புறநானூறு.

கல்வி என்பது கல்லுதல் அல்லது தோண்டுதல் என்னும் சொல் அடியில் பிறந்தது. மனிதனிடத்தில்