பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தங்களுக்கும், தங்களுடைய குழந்தைகளுக்கும் தேவையான புத்தகங்களை வாங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தன்னுடைய அருமை மகனுக்கு, அல்லது அருமை மகளுக்கு, ஒரு பெற்றோர் வாங்கிக் கொடுக்கக்கூடிய உயர்ந்த பரிசு புத்தகமாகவே இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தைக் குழந்தைகளும் கற்றுக்கொள்ள வேண்டும், பெற்றோர்களும் பயில்விக்க வேண்டும்.

பணிப் பாதுகாப்பு என்பது இன்று வளர்ந்து வந்திருக்கக் கூடிய நாகரீகம். தவிர்க்க முடியாதது. வரவேற்கத் தக்கதும்கூட பணிப் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே, அவனிடத்தில் ஒப்படைக்கப்பட்ட குழந்தைகள் தரமானவர்களாக, திறமானவர்களாக, அறிஞர்களாக உருவாவதில் ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அவர்களுடைய பணி தரமானதாக, எல்லோருக்கும் ஏற்றம் தரத்தக்கதாக அமையவேண்டும். அப்பொழுதுதான் பணியினுடைய பாங்கு வளர்ச்சி அடைய முடியும். வெற்றி - பெற முடியும்; உயர்ந்த ஆசிரியர் பணி மேற்கொண்டிருக்கக் கூடியவர்கள், ஒரு நாட்டின் வரலாற்றைச் சீரமைக்க உதவி செய்கிறோம் என்ற எண்ணத்துடன் தம்முடைய பணியை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும்

வகுப்பறையில் உட்கார்ந்து படிக்கும் மாணாக்கன், நாளை நாட்டை ஆட்சி செய்பவனாக மாறமுடியும், மாற வேண்டும். அதற்குரிய வாயிலை பள்ளிக்கூடங்கள், சிறப்பாக, ஆசிரியர்கள் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றோம்.

எனவே இன்றைய கல்வியுலகத்தினுடைய தடத்தில் நாம் செல்லுவது போதாது. அகன்ற, விரிவான, உயர்ந்த குறிக்கோளுடைய, லட்சியமுடைய சிறந்த நாட்டை உருவாக்க வேண்டுமென்ற குறிக்கோளுடன், நாம் செல்லும் திசையை அகலப்படுத்தி மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகின்றோம். சிறந்த கல்வி உலகம், அறிஞர் உலகம் தோன்ற வேண்டும். அதுவே நாம் செல்ல வேண்டிய திசை