பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

321


கொள்ளக்கூடாது. உழைப்பே வாழ்க்கையின் உயர் குறிக்கோளாக அமையவேண்டும். உழைப்பின் வழி, இன்ப நுகர்ச்சியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இது உறுதி.

உழைப்பு, உடலுக்கு உறுதி சேர்க்கும். அறிவு வளர்ச்சிக்கும் உதவும். இந்த உலகில் பலவற்றிற்கு எல்லை உண்டு. ஆனால், அறிவுக்கும் ஆளுமை நிறைந்த உழைக்கும் சக்திக்கும் எல்லையே கிடையாது. மூளை இயங்க, இயங்க அறிவு வளரும். உழைப்பு தொடர்ந்து இடையீடின்றி நிகழின் உழைக்கும் சக்தியும் வளரும்.

நம் ஒவ்வொருவருடனும் பிறப்பிலேயே கலந்திருப்பது உழைப்பாற்றல்; உழைக்கும் சக்தி, உழைப்பதே மனிதப் படைப்பின் நோக்கம். கால்களையும் கைகளையும் மற்றப் பொறிகளையும் முறையாக உழைப்பில் ஈடுபடுத்தினால் எல்லையே இல்லாத அளவுக்கு உழைத்துக்கொண்டே இருக்கலாம்.

அறிவு பூர்வமாகவும், விருப்பத்துடனும், ஆர்வத்துடனும் உழைத்தால் களைப்பு வாராது. மாறாகக் களிப் புணர்வே தோன்றும். ஓய்வு எடுக்கும் எண்ணமே தலை காட்டாது. உழைப்பாளிக்கு ஓய்வு, வேலையை மாற்றிக் கொள்வதுதான்.

நம்முடைய வாழ்நாளின் குறிக்கோள் இன்னதென நிர்ணயம் செய்துகொண்டு உறுதியுடன் தொடர்ந்து உழைக்க வேண்டும். அப்படி ஒரு குறிக்கோளுடன் ஒரு துறையில் வாழ்நாள் முழுதும் உழைத்தால்தான் அந்தக் குறிக்கோள் கைகூடும். நமது வாழ்க்கையும் உன்னத நிலையை அடையும். இங்ஙனம், துறைதோறும் நின்று உழைப்பவர்கள் எண்ணிக்கைக் கூடினால் நாடு வளரும். உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்,

உழைத்து வாழ்வது என்ற வாழ்க்கையின் கோட்பாடு அனைவருக்கும் பொருந்தும். உழைப்பு என்பது அனை