பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எங்கே போகிறோம்!

341


மாறுவோம்! மனித குலத்தை மாற்றுவோம். வளர்ச்சிக்குரிய திசையில் செல்வோம்! மாற்றங்கள் உருவாகும்.

ஏ, என் அருமைத் திருநாடே! எழுந்திரு! விழித்துக் கொள்! வரலாற்றைப் புரட்டி வளர்ச்சியடைய காணும் திசையில் ஊக்கத்துடன் செயல்படுவாயாக! இதுவே நாம் செல்லவேண்டிய திசை! தடம்!

மனிதனுடைய வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் துணையாக இருக்கவேண்டிய சமூகம் இன்று, மனிதனுக்கு விரோத மாகச் செயல்படுகிறது. ஆதலால், சமூக மாறுதல் ஏற்பட்டாலொழிய வளர்ச்சி ஏற்படாது; மாற்றங்களும் நிகழா.

சமூக மாற்றங்களும் வளர்ச்சியும் ஏற்படப் பொது மக்களின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் தேவை. எந்த ஒரு மாற்றமும் தங்களுடைய முன்னேற்றத்திற்குப் பயன்படும் என்ற நம்பிக்கையை மக்கள் மனத்தில் உருவாக்கிவிட்டால் வளர்ச்சி இயல்பாக நடக்கும், மாற்றங்கள் நிகழும்.

வளர்ச்சியும் மாற்றமும் மக்கள் மத்தியில் தோன்றி இடம்பெற வேண்டுமாயின் இலாபத்தையும் உடைமையையும் சேர்க்கும் பழைய சமூகத்தின் நடைமுறை, மதிப்பீடுகள் இவைகளுக்குப் பதிலாகப் புதிய மதிப்பீடுகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

எவ்வளவு முயன்றாலும் பூரண மாறுதல் ஏற்பட, கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டும். இங்ங்ன்ம் சொல்லுவ தால் மாறுதல் மிக மிக மெதுவாக நடக்க வேண்டும் என்று சொல்வதாகப் பொருள் கொள்ளக் கூடாது. மாறுதல் மெதுவாகவும் இருக்கக் கூடாது. சிறுகச் சிறுக ஏற்படும் மாறுதல்கள் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இடம் கொடுக்காது.

ஆதலால், சமூக மாற்றங்களை விரைந்து செய்து முடிப்பதே நல்லது. ஆனால், பழமையில் ஊறிய சமூகம் முழு மூச்சுடன் மாற்றங்கள் எந்த உருவில் வந்தாலும் எதிர்க்கும்.