பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆண்டுதோறும் தவறாமல் காய்க்கும். மரம் முழுவதும் காய்க்கும். ஐந்து வருடத்திலிருந்தே காய்க்க ஆரம்பித்து விடும். 10 வருடத்திலிருந்து நன்றாகக் காய்க்கும்.

சராசரி மரம் ஒன்றுக்கு 50 கிலோ காய்க்கும். ஒரு கிலோ விலை 10 ரூபாய். 40 மரங்களுக்கு 2000 கிலோ. இதன் மதிப்பு 20000 ரூபாய். இவ்வளவு வருமானம் வேறு எந்தச் சாகுபடியிலும் கிடைப்பதில்லை. மாவின் வயது 35 வருடம் முதல் 40 வருடம் வரையாகும்.

அடுத்து, பலாமரம். பயிரிடும் செலவு, பராமரிப்புச் செலவு ஆகியவை மாவைப் போலவேதான் இதற்கும் ஆகும். ஆனால், ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் நடலாம். பலாவும் 5 வருடம் முதல் பலன்கொடுக்க ஆரம்பித்து 10 வருடத்திலிருந்து முழு மகசூல் தரும். அதாவது பலாமரம் ஒன்றுக்கு 10 பழம் 70 மரங்களுக்கு 700 பழம். ஒரு பழத்தின் விலை ரூ. 80 பலா சாகுபடியின் மூலம் ஆண்டு ஒன்றுக்குச் சராசரி ரூ. 50,000 வருவாய் கிடைக்கும்.

ஆதலால், நம் நாட்டுப் பொருளாதாரத்தில் குறிப்பாக அந்நிய நாட்டுச் செலாவணியில் பழத்தின் பங்கு அதிகம். நம்முடைய நாட்டின் ஏற்றுமதியில் 25 விழுக்காட்டுக்கும் மேலாகப் பழங்களும் பழப்பக்குவப் பொருள்களும் பங்கு வகிக்கின்றன.

பழத்தோட்டம் அமைக்கும் தொழிலை அறிய பழக்கன்றுகளை வாங்க பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்திலுள்ள நேமம், அரசு பழப் பண்ணையை நாடலாம்.

நமது நாட்டில் பல பகுதிகளில் தென்னை நன்றாக வளரும். தென்னை, நல்ல பணப் பயிர்; நல்ல வருமானம் தரக் கூடியது. தென்னை ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 வரை நடலாம்.