பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்கை ஒருமைப்பாடே! ஆன்மா சுருங்கிப் போவதல்ல. ஆன்ம மதிப்பீடு இல்லாத உடல் வாழ்வு மட்டுமே வாழ்பவர்கள் பிரிவினை வாதிகள்.

கடவுள் ஒருவரே. கடவுளைத் தவிர வேறு கடவுள் இல்லை. அதுபோல முத்தியும் ஒன்றே. "கடவுள் ஒன்றல்ல; இரண்டு” என்று சொன்னால், அந்த நம்பிக்கை ஆன்மிகத்தின் - ஆன்மிக வாழ்க்கையின் குறிக்கோளை முறியடித்துவிடும். இத்தகைய பிரிவினைவாதிகள் மக்களை மதிக்க மாட்டார்கள். கெட்ட போரிடும் உலகத்தை உருவாக்குவர். இத்தகைய வெற்று மனிதர்கள் ஆன்மிக வேடங்கொண்டிருந்தாலும், ஆன்மிகவாதிகள் அல்ல.

ஆன்மிக வாழ்க்கையில் வளர்ந்தவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். எளிதில் மகிழ்வர்; அன்பு செய்வர்; பிறருக்கு மகிழ்வூட்டுவர். ஆன்மா, அஹிம்சை, அஞ்சாமை, தியாகம், தயை, கள்ளாமை, நன்னடத்தை ஆகியவற்றைத் தனது அணிகலன்களாகக் கொண்டு பலருடன் கூடி வாழ்ந்தால் சமுதாயம் மேம்பாடுறும்.

இன்று பெரும்பாலும் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்து கூட இல்லை. மதங்களைச் சார்ந்திருக்கிறது. மதங்களைக் கூட அல்ல - மத நிறுவன அமைப்புக்களைச் சார்ந்திருப்பதையே இன்று ஆன்மிகம் என்று தவறாகப் பலர் கருதுகின்றனர். மதங்கள் தம்முள் முரண்பட்டே விளங்குகின்றன.

ஒரோ வழி மதங்கள் அன்பை, சமாதானத்தை, சகோதரத்துவத்தைப் போதிப்பது உண்மையானாலும், இந்தப் புனிதக் கொள்கைகளை விட, மதம் என்ற அமைப்பு - நிறுவனம் இவற்றின் ஆதிபத்திய அக்கறை மதங்களுக்கு மிகுந்து விட்டது. ஆதலால் மதங்களின் பெயரால், சண்டைகள், கலகங்கள், கொலைகள் தோன்றுகின்றன. கல்லாடம் சமயப் பிணக்கை மறுக்கிறது.

வள்ளற் பெருமான் சமயப் பிணக்குகளையும், பேதங்களையும் பார்த்து வெறுத்துப் போய் "மதமென்னும் பேய்"