பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் நினைவலைகள்

49


அதனால் குழந்தைகளைப் பெற்றுப் பொழுதைக் கழிப்பதைத் தவிர வேறு வழி? கள், சாராயமெல்லாம் அதிகமானால் குடும்பக் கட்டுப்பாடு கொஞ்சம் இருக்கும். இவன் பாட்டுக்குச் சாராயத்தை ஊற்றிக்கொண்டு எங்காவது கிடப்பான். மனைவியைத் தொந்தரவு செய்யமாட்டான்.

வறுமை நீக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது பயன் தருமா?

காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகம் (சிக்ரி) இயக்குநர் பேராசிரியர் எஸ்.கே. ரங்கராஜன் அவர்களுடன் ஒரு சந்திப்பு.

அடிகளார்: அறிவியல் ஆய்வு மனப்பான்மையும் கடவுள் நம்பிக்கையும் முரண்பாடானவையா? அல்லது ஒத்திசைந்து செல்லக்கூடியவையா?

ரங்கராஜன்: அடிப்படை முரண்பாடு ஏதும் இல்லை. நம்பிக்கைகள் அறிவியலிலும் உண்டு. உதாரணமாக, இயற்கையில் ஒரு நியதி இருப்பதாக அறிவியல் நம்புகிறது, அதைத் தேடுகிறது- அனுபவ அடிப்படையில்.

உணர்வுகள், தேவைகள், நெறிமுறைகள் போன்ற வற்றைச் சார்ந்தே வந்த நம் அனுபவம், தொடர்ச்சியாகக் காலத்தில் மாறி, விரிவடைகிறது. இத்தகைய நீடித்த மாறுதலின் ஊடே, மாறாதிருப்பது எது என்பதைப் புரிந்து கொள்வதே அறிவியலின் குறிக்கோள். கடவுள் நம்பிக்கையின் அடிப்படையும் அதுவே. ஆகவே, இரண்டும் ஒத்திசைந்து செல்லக்கூடியவைதான்.

அடிகளார்: சமயத் தத்துவங்கள் ஒருவருடைய இன்ப துன்பத்திற்கு ஊழே என்று கூறுகின்றன. அப்படியிருக்க, வறுமை நீக்கப் போராட்டத்தில் ஈடுபடுவது பயன் தருமா? முயற்சி, சமயத் தத்துவங்களுக்கு முரண்பட்டதல்லவா?