பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைச் செல்வம்

161


அறிவு வாழ்க்கை!

றிவுடையார் எல்லாம் உடையார் என்பது வள்ளுவம். அது எப்படி, அறிவுடையார் எல்லாம் உடையவராக இருக்கமுடியும்? இன்று படித்த பட்டதாரிகளில் பலர் வேலை வாய்ப்பு இல்லாமலும் வாழ்க்கை வசதிகள் இல்லாமலும் அல்லற்படுகின்றனர்.

ஆதலால், அறிவுடையார் எல்லாம் உடையார் என்பது நடைமுறைக்கு இசைந்த செய்தியா? ஆனால், அறிவு எது என்பதன்பொருளை அறிந்தால் இந்த வினாவைக் கேட்கமாட்டார்கள். கல்வி வேறு; அறிவு வேறு. கல்வியின் வாயிலாக அறிவைப் பெறலாம்; பெறக்கூடும். ஆனாலும் கல்வியே அறிவன்று. அதுமட்டுமன்று.

அறிவு பெறுதலுக்குரிய வாயிலும் கூட குறுகிய எல்லையுடையதன்று. அது பரந்துபட்டது. வாழ்க்கையை முழுமையாக வாழ முயன்றால் வாழ்க்கையின் படிநிலைகளிலேயே அறிவு தோன்றும்; அறிவியல் உண்மைகள் புலப்படும். இது வாழ்வியல் வரலாற்று உண்மை. இன்று பெரும்பாலும் பிழைப்பு நடத்தும் நிலையே மேலோங்கி வருகிறது. வாழ்க்கையை உள்ளார்ந்த அனுபவங்களுடன் சுவைத்து வாழும் வாழ்க்கைக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. வாழ்க்கை எந்திர மயமாகிவிட்டது. அதனால் வாழ்க்கை ஒரு பல்கலைக்கழகம் என்ற அரிய உரை, இன்று வாழ்க்கையில் காட்டப்பெறும் அலட்சியத்தின் காரணமாகவும் கொச்சைத் தனமான ஆசைகளின் காரணமாகவும் அவலப்பட்டுவிட்டது. சராசரி, தனிமனித வாழ்க்கையிலிருந்து சமுதாய வாழ்க்கைவரை இந்தக் குறை பரவலாகக் காணப்பெறுகிறது.

வாழ்க்கையில் நாம் ஈட்டும் பொருள்களோ நாம் அடையும் இன்ப துன்பங்களோ நம்மை வளர்த்து விடவும்; அழித்துவிடவும் முடியாது. அதனால், இவைகள்