பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறவழிகாட்டி

187


இல்லை. அதனை நினைந்து வாழ்கின்ற அறிவு இல்லை. எனவே, அடிப்படையான அறிவைக் கொடுத்துவிட்டால் உணர்ந்து வழிபடுவார்கள். அதன் காரணமாக அவர்களே ஆலயங்களை எடுப்பர் என்ற நம்பிக்கையைத்தான் பாரதியார் சொல்லி வைத்தார்.

இதுபோலத் திருவள்ளுவரிடத்தில் பெருமதிப்பை இந்தக் கழகம் ஏற்படுத்தி வருகின்றது. நமது நலத்திற்கென்று நூலாக்கித் தந்த பெரும் புலவருக்கு நாம் கைம்மாறு செய்யவேண்டும் என்ற உணர்ச்சியை இந்த நாட்டு மக்களுக்கு ஊட்டிவிடுவீர்களானால் இவ்வுலத்தின்கண் திருவள்ளுவருக்கு எங்கும் இல்லாத நிலையில் இரத்தின மாளிகை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டு.

திருவள்ளுவரைப்பற்றி அறியாதாரும் உண்டு என்பதை உணர்ந்து முதன்முதலில் குன்றக்குடிக்கு வந்தவுடன் வள்ளுவர்க்கு விழாக் கொண்டாடினோம். சமயாசாரியார்கள் விழாவை நடத்தாது வள்ளுவர் விழா நடத்தி யமைக்குக் காரணம் ஒன்று கூறினோம்; மக்கள் உள்ளத்திலே அடிப்படையான கருத்தை அடைய முடியாத நிலையிலேஅவர்கள் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்கமுடியாத நிலை யிருக்கிறது. எனவே மக்கள் உள்ளத்தைத் தொட்டுப் பார்க்கின்ற வரைக் கொண்டாடினாற்றான் சமயவாழ்க்கை வளம் பெறும் என்ற நம்பிக்கை உண்டு. இக்காரணத்தால் தான் திருவள்ளுவருக்கு விழா எடுக்கின்றோம். இவ்வாறு அடிப்படைக் கருத்தைப் புகுத்தியவர் திருவள்ளுவர்.

திருவள்ளுவருக்கு உயிர்நாடியாக இருப்பது அன்புநிலை என்பதை மறந்துவிடுதல் கூடாது. அடிப்படையிலே இந்த அன்பு நிலையை உள்ளத்தில் வைத்து வள்ளுவர் மாளிகை கட்டவேண்டும். திருவள்ளுவர் கழகத்தார் செய்கின்ற முதல் தொண்டாக எல்லா மக்களிடத்திலும் திருக்குறள் காட்டுகின்ற அற வாழ்க்கையை யூட்டவேண்டும்.