பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

271


காரணம், சோறு பற்றாக்குறை யல்ல. நாடாளும் அரசன் உயர்குடிப் பிறப்பாளனாக இல்லாது இருக்கிறானே என்று தான் கவலையுற்றான். "அரசன் உயர்குடிப் பிறப்பாளனாக இருந்திருப்பின், இயற்கை அறிவினைக்கண்டு பெரிதும் பாராட்டிப் பொன்னும் பொருளும் நிறைய அள்ளிக் கொடுத்து என்னுடைய தரித்திரத்தை ஓட்டியிருப்பான். ஆனால், அரசனோ தரித்திரம் பிடித்தாற்போல் ஒருவேளைச் சோறு என்று உத்தரவிட்டான். நான் இந்த அரசனைக் குற்றமாகக் கருதவில்லை. அவன் பிறந்த குடி ஆராய்வதற்குரியது” எனறான்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின்
அவனைக் குலத்தின்கண் ஐயப் படும்

என்ற குறள் இதனை எடுத்துக்காட்டுகிறது. மற்றை எல்லாத் தவறுகளும் எளிதில் மறைக்கப்பெறும்; மறக்கப் பெறும். ஆனாலும் ஒருவனும் ஒருத்தியும் கூடிநடத்தும் மக்கள் தோற்றத்திற்குக் காரணமாகிய மனையற வாழ்க்கையில் தோன்றும், தரக்குறைவுகள் சீக்கிரம் மறைவதில்லை; மறக்கப் பெறுவதும் இல்லை.

காரணம், அவர்களுடைய கூட்டு முயற்சியால் உருவாக்கப் பெற்ற தரக்குறைவான மக்கள் நாட்டில் நடமாடுகிற வரையில் அவர்களுடைய மனைவாழ்க்கை ஐயப்பாட்டிற்குரியதாக-இகழ்ச்சிக்குரியதாக விளங்கும். ஆதலால், மனைவாழ்க்கை நடத்துவோர் தம்முடைய வழித் தோன்றல்களின் நலம் கருதியும் தங்களுடைய புகழ் கருதியும் தரங் குறையாமல் இனிய நல்லுணர்வுகளோடு வாழ வேண்டும் என்பதை நினைவிற்கொள்க.

நிலத்தின் இயல்பை நிலத்தில் இட்ட வித்து முளைக்கும் நிலையிலேயே காட்டும். முளை செழுமையாக