பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் பேசுகிறது

283


யின் பேரால் முட்டுக்கட்டையிடுவோர் உளர். சமுதாயக் கூட்டு வாழ்க்கைக்கு எதிரான பெருமை பெருமையன்று; சிறுமையேயாம். பலரோடு பழகி அவர்தம் இயல்பறிந்து தம் நிலை வழுவாமல் அவர்தம் நிலையொடு ஒத்து ஒழுகிப் பழகும் இயல்பே பண்பாடு. "பண்பெனப் படுவது பாடறிந்து ஒழுகல்" என்பது கலித்தொகை.

பண்புடைமையென்ற ஆன்ற ஒழுக்கத்தை எவ்வழியில் அடைதல் இயலும்? பெறுதற்குத் தனியே ஒரு முயற்சி தேவையில்லை. உயர்ந்தோர், தாழ்ந்தோர் பாராமல் யார் மாட்டும் எளியராகப் பழகும் இயல்பு அமைந்துவிட்டால், பண்புடைமையும் எளிதாக வந்து அமைந்துவிடும். எளிமையாகப் பழகினால் மட்டும் போதாது. பிறர் இயல்பறிந்து செவ்வி பார்த்து அதாவது சந்தர்ப்பம் சூழ்நிலை பார்த்து நடந்து கொள்ளவும் வேண்டும். இதனை,

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு

என்று குறள் கூறுகிறது.

மக்கள் யாவருக்கும் உறுப்புகளாலாய ஒப்பு கிடைத்து விடுகிறது. உறுப்புகளால் ஒத்திருப்பதாலேயே ஒருவர் இன்னொரு மனிதரோடு ஒத்து விடுவதில்லை. பெருமையும் சிறுமையும் உறுப்புகளால் அமைந்து விடுவதில்லை. உறுப்புகளைப் பயன்படுத்தும் பண்பட்ட வழிகளாலேயே, சிறப்பு வந்து பொருந்துகிறது. பிணநிலையிலும் மக்கள் உறுப்புகள் உண்டு. அந்த நிலையில் அந்த உறுப்புகளை விரும்பி நேசிப்பார் யார்? யாரும் நேசிக்கமாட்டார்கள். மாறாக வெறுப்பர். மக்கள் தம்முள் ஒத்த நிலையினராதல், பண்பின் வழியிலேயே சாலும். வேறு எவ்வழியிலும் இயலாது. ஒருவர் மற்றவரை நோக்கித் தம்முடைய பண்பாட்டு நிலையினை உயர்த்திக் கொண்டாலே, ஒப்புடையவராகலாம். இதனை,