பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


யால் ஒப்புக்காக "மரம் போல்வர்” என்று கூறுகிறது. உண்மையின் அவர்கள் மரம் போன்றவர்களும் அல்லர். மரமாவது பல்லுயிர் மகிழத் தன்னிழல் தருகிறது. உயிரியக்கத்துக்குத் தேவையான காற்றைத் தருகிறது; காய்களை, கனிகளைத் தருகிறது; மருந்தாகவும் பயன்படுகிறது. திருக்குறளில் பிறிதோரிடத்தில் "மருந்தாகித் தப்பா மரம்" என்ற பாராட்டப்படுகிறது. ஆதலால், பண்பாடில்லாதவர்கள் மரத்தினும் மோசமானவர்கள் என்று கருதுதல் சிறப்பு. இதனை,

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்

என்று குறள் கூறுகிறது.

சிலர், ஒரு சிலரோடு ஒத்து உறுதுணையாக இருந்து வாழமாட்டார்கள். காரணம் கேட்பின் அவர் கோபக்காரர்; சிடுமூஞ்சிக்காரர்; அப்படி, இப்படி, என்றெல்லாம் கூறி "அவருக்கும் நமக்கும் ஒத்துவராது” என்பர். ஒத்துவராமைக்குரிய கீழ்மைக்குணம் இவரிடத்திலா? அல்லது மற்றவரிடத்திலா? அல்லது இரண்டு பேரிடத்திலுமா? மற்றவர்கள் தம்மோடு ஒத்துவரவேண்டும் என்று விரும்புகிறார்களேயன்றி, தாம் மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டுமென்று கருதுவதேயில்லை. சிலர் நட்புக் காட்ட மாட்டார்கள். நட்புக் காட்டாதது மட்டுமல்ல, பகைமை கொண்டு தீமையே செய்வர். அவர்கள் மாட்டும் பண்புடையவராகப் பழகுதலே உயர்ந்த சிறப்பு. அங்ஙனம் வாழ இயலாதவரைக் கடையராகவே அறிஞர் உலகம் கருதும். இதனை,

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை

என்று குறள் கூறுகிறது.