பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 2.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

318

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



தம் கைகளால் தாமே உழுது உண்டு, வாழ்க்கை நெறியினை மேற்கொண்டோர் சிறந்த வேளாண்குடி மரபினர். அவர்கள் இல்லையென்று இரப்பவர்களுக்கு உள்ளதை இல்லையென்று ஒளிக்காது வழங்கும் இயல்பினர். உழவுத் தொழில் மூலம் வரும் செல்வம் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வரும் செல்வம். மற்றச் செல்வங்களை அப்படி உறுதியாகச் சொல்லமுடியாது. ஆதலால், பெரும்பாலும் உழவர் குடிப் பரம்பரையினராக வந்த வேளாளர் பெருங்குடி மக்கள் வரையாது வழங்குவர்; விருந்தோம்புவர்; உண்பித்து உண்பர். திருஞான சம்பந்தரும் "இரப்போர்க்குக் கரப்பிலார்” என்று உழவர் பெருங்குடியை வாழ்த்துகிறார்.

உழவுத் தொழிலுடையோர், உழவுத் தொழிலை மறந்துவிடுவாராயின் உலகம் நிலைதடுமாறும். மக்கள் சமுதாயம் உண்ண உணவின்றி அல்லற்பட நேரிடும். ஏன்? முற்றத்துறந்த முனிவர்களேயானாலும் அவர்தம் வாழ்க்கையும் அல்லற்படும். துறவிகளும் தாம் கொண்ட ஒழுக்கத்தில் நிலைநிற்றல் அரிது. இதனை,

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை

என்ற குறளால் அறியலாம்.

ஆக, சுற்றிச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தாரையும், நாடிவரும் விருந்தினரையும், நாடு காக்கும் அரசையும் அருளறம்பூண்ட துறவிகளையும் காப்பாற்றும் உயர்வு நலம் சிறந்த தொழில் உழவுத் தொழிலேயாம்.

திருவள்ளுவர் வழிவழி வேளாண்மைத் தொழில் சிறந்த தமிழ்க் குடியில் பிறந்தமையால் உழவுத் தொழில் நுட்பத்தையும் பேசுகிறார். நிலத்தை நல்ல இளகிய ஈரப்பதத்தில் ஆழமாக உழவேண்டும். அங்ஙனம் குறைந்தது நான்கு