பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்தார். இதிலே நான் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்கிறேன். வள்ளுவர் வாழ்ந்த காலத்திய மனித சமுதாயம் மேடு பள்ளங்களையுடையதாகவே இருந்தது. ஆம், மேடுகள் குறைவாகவும், பள்ளங்கள் சற்று அதிகமாகவும் இருந்தன. அந்தப் பள்ளங்களை நிரப்பி, மனித ஒழுக்க நெறியில் அந்தச் சமுதாயத்தை ஈடேற்ற வேண்டும்-வழி நடத்திச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார்.

திருவள்ளுவர் மனித சமுதாய வரலாற்றில் ஏற்பட்டிருந்த குறையை-வீழ்ச்சியை-ஒழுக்கக் கேடுகளைக் கண்டுபிடித்து, அவற்றை மாற்றியமைத்து ஏற்றமும் எழுச்சியும் உண்டாக்கிச் சமுதாயத்தை நல்வழியில் வழிநடத்திச் செல்ல வேண்டும் என்ற தூய நன்னோக்கத்தோடு வள்ளுவத்தைச் செய்தார்-மனிதகுலச் சிந்தனையாளனாக-ஒழுக்க நெறியாளனாக-இவற்றிற்கெல்லாம் மேலாக, சமுதாயத் தலைமைக்குத் தகுதியுடையவனாகத் தன்னை ஆக்கிக் கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைச் செய்தார் என்ற உண்மையை- முன்னுரையை நாம் இங்கே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு-அந்த முன்னுரையிலிருந்து நாம் சில செய்திகளைக் காணலாம்.

திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த மனித சமுதாயத்தில் எண்ணத் தொலையாத-ஏராளமான பிரிவினைகள் இருந்திருக்கின்றன. அந்தப் பிரிவினைகளின் காரணமாக-வேற்றுமைகளின் காரணமாக மனிதனே மனிதனைப் பகைக்கின்ற மிகக்கொடிய சூழல் வளர்ந்துவிட்டது. ஒருவருக்கொருவர் சிரித்துப்பேசி மகிழப் பிறந்த மனித குலம், குளிர்ந்த பார்வையால் ஒருவரோடொருவர் கூடி உறவாடப் பிறந்த மனிதகுலம் தனக்குள் பல்வேறு வேற்றுமைச் சுவர்களை எழுப்பிக் கொண்டது. மனித சமுதாயத்தில் இல்லாத பல்வேறு கற்பனைகளை உருவாக்கிக் கொண்டு எழுப்பிய பிரிவினையுணர்வினைத் திருவள்ளுவர் பார்த்தார். "பிறப்பு