பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வொழுக்கம் இருக்கிறதா? அந்த அகவொழுக்கத்தைப் பெற்றவனே பெருங்குடிமகனாவான்-‘ஒழுக்கமுடைமை குடிமை’ என்று சொன்னார். உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோலே ஒழுக்கந்தான். பிறந்த வீடும், பேசும் மொழியும், கும்பிடும் கோயிலும், ஓதுகிற வேதமும் உயர்குடிப்பிறப்பை அளக்கும் அளவுகோல்கள் அல்ல என்று கருதினார். இவற்றையே அளவு கோலாகக் கருதிப் பெருமையும் சிறுமையும் பேசிய-கற்பித்த பேதைமையைச் சாடினார். மனித குலத்திலிருந்த சாதி இனவேற்றுமைகளை ஒழித்து மனிதகுலத்தை ஒருகுலமாக்குவதற்கென்றே திருவள்ளுவர் வள்ளுவத்தைச் செய்தார். திருவள்ளுவர் விரும்பிய வண்ணம் சாதி இன வேறுபாடுகளை ஒழித்துக்கட்டி, மனிதகுலத்தை ஒருகுலமாக்க திருவள்ளுவர் வலியுறுத்துவதுபோல நாம் ஒழுக்கத்தை வளர்க்க வேண்டும்.

ஒழுக்கத்தைத் தூண்டி வளர்ப்பன கல்வி, அறிவு, சிந்தனை ஆகியன. இந்த உண்மையையும் திருவள்ளுவர் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தார். தமது தவறான பழக்க வழக்கங்களைக்கூட நியாயமானவை என்று பிடிவாதம் பிடிக்கின்றவர் பலர் இருக்கின்றனர் என்பதையும் திருவள்ளுவர் நன்றாக உணர்ந்து கொண்டிருந்தார். மனிதனின் அகக்கண் குருடாகிப் போனதாலேயே அவன் தன்னுடைய வாழ்வியலைப்பற்றி-ஒழுக்க இயலைப்பற்றி - பழக்க வழக்கங்களைப் பற்றித் தானாகச் சிந்தித்துத் தன்னைச் செழுமைப் படுத்திக்கொள்ள முடியவில்லை. செழுமைப்படுத்திக் கொள்ளுகின்ற அளவிற்குக் கல்வியறிவு இல்லை என்பதைக் கண்டார். எனவே, சமுதாயம் முழுமைக்குமாகக் கல்வி கொடுக்கவேண்டும். சமுதாயத்தையே படிப்பிக்க வேண்டும் என்றார். ‘எல்லாரும் படியுங்கள்! எல்லாரும் சிந்தனை செய்யுங்கள்’ என்றார். கல்வியின் இன்றியமையாமையை - கல்வியின் சிறப்பை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி வலியுறுத்துகிறார்.