பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொள்வது இயல்பு. எனினும், அந்த எல்லைக் கோடுகளுக்குள்ளேயே நின்று விடுதல் கூடாது. அதுபோல, அன்பைத் தூண்டி வளர்ப்பதற்கு மொழி ஒரு கருவி. எனினும், மொழியின் எல்லைக் கோட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு பேசுவது மட்டும் அறிவாகிவிடாது. மனித குலத்தை நேசிக்கின்ற உணர்வும், மனித உலகத்தை வாழ்வித்து வாழும் உணர்வுமே அறிவு எனப்பெறும். திருவள்ளுவர் கூட கல்வி வேறு-அறிவுடைமை வேறு என்றுதான் கருதினார். கல்வியே அறிவு என்று அவர் ஒத்துக்கொண்டிருப்பாரானால், ‘கல்வி’ என்று ஒர் அதிகாரமும் ‘அறிவுடைமை’ என்று இன்னோரதிகாரமும் வைத்திருக்கமாட்டார். கல்வி என்பது அறிவைப் பெறுவதற்குத் துணை செய்யும் ஒரு கருவி-அது மனிதனை அறிவுலகத்திற்கு அழைத்துச் செல்லும். அவ்வளவு தானே தவிரப் படித்தவர்கள் எல்லாம் அறிவுடையவர்கள் என்று ஒத்துக் கொள்ள முடியாது. படித்தவர்கள் எனப்படுவோரில் ‘படிக்காதவர்’களும் இருக்கிறார்கள்-படிக்காதவர்கள் எனப் படுவோரில் 'படித்தவர்’களும் இருக்கிறார்கள். கல்விவேறு - அறிவுவேறு என்ற உண்மையைத்தான் இது நமக்குக் காட்டுகிறது.

இன்று நாம் சாதி, இனம், மொழி, நாடு ஆகிய எல்லாவகையான எல்லைக்கோடுகளையும் வேற்றுமைகளையும் கடந்த ஒரு புதிய சமுதாயத்தை-உலக மனித சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எனவே, மொழியைப் படிப்பதோடு அறிவியல், பொருளியல், தொழிலியல், சமூக இயல் ஆகிய பல்வேறு துறைகளிலும் அறிவைப் பெற்று நம்மை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அன்று, திருவள்ளுவர், பரந்துபட்ட அறிவியலைத் தூண்டிவிட்டு-பரந்துபட்ட சிந்தனையைத் தூண்டிவிட்டு, மனித சமுதாயத்தில் பரந்துகிடந்த வேற்றுமைகளைக் களைய வேண்டும் என்ற நோக்கிலேயே திருக்குறளைச் செய்தார்.