பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உள்ளூருக்குள்ளே, கனிகளைத்தரும் பயன்மரம் பழுத்துக் கனிந்திருக்கிறது. அது, கனிந்த கனிகளைக் கிழே உதிர்க்கும்போது இது யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று எண்ணிப் பார்ப்பதில்லை. வேலிவைத்துப் பாதுகாத்து வளர்த்தவனின் வீட்டுத் தோட்டத்துக்குள்ளேகூடப் பழம் முழுவதும் விழுவதில்லை. வேறு இடத்திலும் விழலாம். அது, இன்னார் இனி யார் என்று பார்ப்பதில்லை-இவர் உதவினார்-இவர் உதவி செய்தார் என்றுகூடப் பார்ப்ப தில்லை. தன்னுடைய கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது என்ற கடமையுணர்வோடு மட்டுமே கணிகளை உதிர்க்கிறது. இவ்வாறு நட்டவனுக்கா எருவிட்டவனுக்கா, நீர்பாய்ச்சியவனுக்கா, வேலியிட்டவனுக்கா, பட்டாக் காரனுக்கா என்று பாராமல், கனிந்த கனிகளைச் சமுதாயத்திற்குக் கொடுப்பது தன்னுடைய கடமை என்று கடமையுணர்ச்சியோடு மட்டும் கனிகளை உதிர்ப்பதுபோல, நெஞ்சுடையவன் தன்னை மறந்து, மறந்து எதைப்பற்றியும் சிந்தனை செய்யாமல், யாருக்குக் கொடுக்கிறோம் என்பதைப் பற்றிக்கூடக் கவலைப் படாமல் கொடுப்பான். இஃது இரண்டாவது வளர்ச்சி.

திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே செல்லுகிறார் - மூன்றாவது உலகத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். அந்த உலகந்தான் மனித குலத்தை வாழ்விக்கும் என்று சொல்லுகிறார். அது எந்த உலகம்? அது மருந்து மரத்தோடொத்த பெருந்தகையார் உலகம். மருந்து மரம் இருக்கிறதே அது பல்லாற்றானும் நமக்கு உதவுகிறது. அதனுடைய பட்டை வெட்டப்பெறுகிறது-இலைகள் பறிக்கப் பெறுகின்றன. பூக்கள் கொய்யப்பெறுகின்றன. வேர் வெட்டப் பெறுகிறது. இவ்வாறாக மருந்து மரத்தின் எல்லா உறுப்புக்களையும் எடுத்துப் பயன் படுத்துகிறோம். எனினும் அந்த மரம் ஆடாமல்-அசையாமல் உலகிற்கு இன்பந்தந்து வாழ்விக்கிறது. அது தன்னை நினையாது மட்டுமன்று -