பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழமுது



245



இங்ஙணம், தனித்தனி நெறிகளுக்கேற்றவாறு திருக்குறள் அதிகாரங்கள் அமைந்துள்ளன. இத்தகைய அதிகார அமைப்பில் கொல்லாமையும் ஒன்று.

உயிர்கள், உடம்பொடு தொடர்பு கொண்டு வாழ்க்கை நிகழ்த்தித் தம்மை வளர்த்து உயர்த்திக்கொள்ளும் சாதனமே வாழ்வியல். இந்த வாழ்வியலுக்கு ஏற்றவாறு இசைந்துள்ள உடம்பொடு உயிரிடை ஏற்பட்டுள்ள நட்பை-உறவைப் பாதுகாப்பது ஒரு பேரறம் ஆதலாலன்றோ, "உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர்.

உடம்பிற்கும் உயிர்க்கும் ஏற்பட்டுள்ள உறவை நீக்குதலையே ‘கொலை’ என்று கூறுகிறோம். கொல்லப் பெறுதல் உடம்பேயாயினும், உயிர்க்கொலை என்றே கூறுகிறோம். காரணம், உடம்பு இல்வழி உயிரின் இயக்கமும்-துய்த்தலும் நுகர்தலும்-வளர்ச்சியும் இல்லாது போதலினாலேயாம்.

அதுபோலவே, உயிர் தங்கி உலவும் உடலியக்கத்துக்கு எரிபொருளாகிய உணவினை வழங்குதலைப் பேரறம் என்று கூறுகிறோம். உணவு இல்வழி உடலியக்கமில்லை. உடல் இயங்காவழி உயிர்க்கும் இலாபமில்லை. அதனாலேயே உடல் உயிர் உறவு இயக்கத்தைப் பாதுகாக்கின்ற உணவு, மருந்து முதலியன வழங்கும் உடன்பாட்டு அறங்களாலும், அது போலவே உடல் உயிர் உறவை நீக்காமையைக் கொல்லாமை என்ற எதிர்மறை அறத்தாலும் மனித உலகம் போற்றுகிறது.

திருக்குறளில், கொல்லாமை என்று ஒர் அதிகார முண்டு. கொல்லுதலின் கொடுமையை வள்ளுவர் நினைந்து நினைந்து கொதித்து கண்டிக்கின்றார். இந்த அதிகாரத்தில் முதற் குறளாக கொல்லாமையை அறம் என்று பொதுவாக உணர்த்தி, அடுத்த குறளில்,