பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

316

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தக்கவகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றிப் பின் விரிவாக எழுதுகின்றோம்.

முன் கடிதத்தின் தொடர்ச்சியாகச் சில செய்திகள்! - இந்தியாவில் சாதிகள் தோன்றியது ஆரிய நாகரிகத்திற்குப் பிறகுதான். கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகரும் சாதியைக் கண்டித்திருக்கிறார். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரடிகளும் சாதி வேற்றுமைகளைச் சாடி இருக்கிறார். சற்றேறக் குறைய 1500 ஆண்டுகளாகத் தமிழறிஞர்கள், சான்றோர்கள் சாதிமுறைகளை மறுத்து வந்தாலும் சாதி முறைகள் போகவில்லை. அது மேலும் மேலும் இரத்தப்புற்று நோயாக வளர்ந்து கொண்டு வருகிறது. சாதி முறைகள் மதத் தொடர்புடையனவாக இருந்த வரையில் அது சமூகத் தீமையாக இருந்து வந்தன; ஒரளவு பொருளியல் தீமையாகவும் விளங்கின. இட ஒதுக்கீடுகள் வந்த பிறகு, சாதி வேற்றுமைகள் சமூகத் தீமையாக மட்டுமல்லாமல் அரசியல் தீமையாகவும் உருப் பெற்று விட்டன.

இனிய செல்வ, உன்னுடைய கேள்வி நியாயமானதே! பின் தங்கியவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியவர்களுடன் சம நிலைக்கு வரச் சலுகைகள் தேவையே! தேவை மட்டும் அல்ல, அவசியமும் கூட! ஒதுக்கீடு தேவை என்பதில் இரண்டு கருத்து இல்லை! எவ்வளவு காலத்திற்கு ஒதுக்கீடு தேவை? ஒதுக்கீட்டு முறையை நடை முறைப்படுத்துவது எப்படி என்பவற்றில் தான் கருத்து வேறுபாடு. மிகச் சிறந்த அறம் கூடச் செய்யும் முறையால் பயன்தராமல் போவதுடன் மட்டுமன்றி எதிர்விளைவையும் உண்டாக்கி விடுமே! மருந்து நல்லதாக இருந்தால் மட்டும் போதாது; மருந்தைக் கையாளும் முறையும் நல்லதாக அமைய வேண்டும். ஒரு மருந்து அனுபானத்தால் முரண்பட்ட பலன்களைத் தரும் என்பதை நினைவிற் கொள்க.