பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்று அருளியுள்ளார். இங்கு "ஒத்தது” என்றது ஒத்துப் போகக்கூடிய பண்பாட்டை மட்டுமன்று; அளவையும் கூடக் கூறியதாக ஏற்கவேண்டும். அதாவது பலவற்றில் ஒத்துப் போக இயலவில்லையா? கவலைப்படாதே; ஏதாவது ஒரு செய்தியில்-ஒரு கருத்தில் ஒத்தகருத்து இருக்கிறதா? அது போதும். உறவினை வளர்த்துக் கொள்ள, நட்பினை வளர்த்துக் கொள்ள; காலப்போக்கில் இந்தக் குறைந்த அளவான-இல்லை, ஒரே ஒரு உடன் பட்ட செய்தியில் தொடங்கிய உறவு வளரும். பழகும் நட்பு உருவாகும். மேலும் பல முனைகளில் கருத்தொருமைப்பாடு தோன்றும் வேற்றுமைகள் குறையும். மேலும் பலவற்றில் உடன்பாடான கருத்துக்கள் தோன்றும். இதுவே வாழும் முறைமை, இனிய செல்வ, எண்ணிப்பார்; இன்று பலர் கூடுகின்றனர்; கூடுகின்றோம் ஆயினும். ஒற்றுமையில்லை. வெளியே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது; உள்ளே பல்குழு மனப்பான்மை; குடுமிபிடிச் சண்டைகள்; ஏன்? பொதுக் குறிக்கோள் இல்லை; அந்தக் குறிக்கோளை அடைய தற்சார்பை, தற்பெருமையைத் தியாகம் செய்ய மனமில்லை; இந்தியா ஒன்றுபட வேண்டுமானால் ஒரே ஆன்மீக ராகம் இசைக்கப்பட வேண்டும்.

இந்த நிலை நீடித்தால் இன்னும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மாற்றமும் ஏற்படாது; வளர்ச்சியும் இராது. அடுத்து எழுதுவோம்.

இன்ப அன்பு
அடிகளார்
47. நடிப்புப் போலிகள்

இனிய செல்வ,

இன்று பெருமை எது? நன்மை எது? பெரியோர் யார்? இவையெல்லாம் துணிந்து தெளிவு காணமுடியாத வண்ணம் நாட்டின் நடப்புகள் சென்று கொண்டிருக்கின்றன. மனித மதிப்பீடுகள் மறைந்து பண மதிப்பீட்டுச் சமுதாயம்