பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



433


நாட்டில் ஒரு பெரிய தொழில்! பங்குச் சந்தை என்றால் என்ன? நமது நாட்டில் நடக்கும் பெரிய தொழில் நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வரும். அந்தத் தொழிற்சாலையின் நடைமுறை, ஸ்திரத்தன்மை, இலாபம் ஆகியவற்றிற்கு ஏற்ப பங்கின் விலை கூடும் அல்லது குறையும். கூடினால்-ஒரு பங்கின் விலை ரூ.1000 என்றால் பங்குச் சந்தையில் ரூ.2000 விலை போகும். சந்தைகளுக்கு ஏற்பக் கூடவும் கூடும்; குறையவும் குறையும். ஹர்ஷத்மேத்தா என்பவர் எடுத்த பங்குகள் பல மடங்கு கூடுதலாகப் போயிருக்கிறது. இந்தப் பங்கு உயர்வு கேடுதரும் என்பது நாடறிந்த உண்மை. இவர், தான் விரும்பியவாறு எல்லாப் பங்கு விலையையும் கூட்டியிருக்கிறார். பங்குகளை வாங்கியிருக்கிறார். பங்குகளில் ஒரு சில பங்குகளை வைத்துக்கொண்டு வங்கிகளின் பணத்தை திறமையாகப் பயன்படுத்தியுள்ளார்.

இனிய செல்வ, நமது மாண்புமிகு அமைச்சர் ப.சிதம்பரம் அமைச்சர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்து விட்டார், தெரியுமா? ஏன் ராஜிநாமா செய்தார்? இந்தப் பங்குச் சந்தையில் ப.சிதம்பரம் பங்கு வாங்கியுள்ளார். ஒருவர் தாம் சம்பாதித்த பணத்தில் பங்கு வாங்குவது தவறில்லை. இன்று பல இடங்களில் நாடே விலை பேசப்படுகிறது. இன்று நடந்து வருகிற ஒரு பெரிய காரியம் அது. கையூட்டை வெளிச்சம் போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். இன்றைக்குக் கையூட்டை தேசிய மயப்படுத்திய பெருமையும் நமது தலைமுறைக்கு உண்டு. இவ்வளவும் நாட்டில் நடக்கும்பொழுது ப.சிதம்பரம் பங்குச் சந்தையில் பங்கு வாங்கியது எப்படி ஊழலாக முடியும்? என்ன சிக்கல் என்றால் நடைமுறையில் இருந்த விலையைவிடக் கூடுதலாக விலை கிடைத்துள்ளது. அவ்வளவு விலை கூடுதல் அமைச்சர் என்பதற்காகக் கிடைத்ததா? அல்லது அமைச்சர் பொறுப்பிலிருந்து ப.சிதம்பரம் அவருக்கு ஏதாவது உதவி செய்திருப்பாரா? என்றெல்லாம் ஐயம் பிறக்கிறது.

தி.29.