பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



439


இருத்தல் கூடாது. ஆள்பவர்கள் வழிவழியாக வந்துள்ள முறைகளையும், சட்ட நூல்கள் வகுத்துக் கூறும் முறைகளையுமே கருவியாகக் கொண்டு ஆட்சி நடத்த வேண்டும்; நீதி செலுத்த வேண்டும். இதுதான் ஆட்சிமுறை.

மக்களாட்சி முறை நாடுகளில் சட்டங்களே ஆள்கின்றன; ஆளவேண்டும். ஆளுங் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போன்றவை. அல்லது அண்ணா கூறியது போல, "எதிர்க்கட்சி, ஆளுங்கட்சிக்கு மூக்கணாங்கயிறு போன்றது”. இனிய செல்வ, மூக்கணாங்கயிறு, மாட்டின் மூக்கை அறுக்கவும் கூடாது; வண்டியையும் தன்போக்கில் போகவிடாமல் மாடுகளை இழுத்துப் பிடிக்கவும் பயன்படவேண்டும். இன்று ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் எதிரிகளாக நடந்து கொள்கின்றன. ஒரு சிலர் மையொட்டித் தாளைப்போல நடந்து கொள்கிறார்கள். இவ்விரண்டு முறையுமே தவறு.

எதிர்க்கட்சிக்கு என்று சில கொள்கைகள் உண்டு. அந்தக் கொள்கைகளை ஆளுங்கட்சி ஏற்காது. ஆனால், பொதுவாக மக்களுக்கு நலன்கள் செய்யும் ஆட்சிக்கு உற்ற துணையாக எதிர்க்கட்சிகள் இருக்க வேண்டும். ஆளுங்கட்சி மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடும்பொழுது எதிர்க்கட்சிகள் அவைகளை நிகழவொட்டாமல் தடுக்க வேண்டும். இனிய செல்வ, நீ கேள்வி கேட்பது புரிகிறது. இன்று நாடு தழுவிய நிலையில் மக்களாட்சி முறை. முறைபிறழ்ந்து விட்டதால் மக்கள் நலம் நாடும் பணி குறைந்து வருகிறது. நடைபெறும் சில பணிகளும் கூட குழுஉ மனப்பான்மையில் அவரவர் கட்சியினருக்கே அமைகிறது. இனிய செல்வ, எதிர்கட்சிகளைக் கண்காணித்தல், ஓட்டுக் கேட்டல் போன்றவைகள் நிகழ்கின்றன. ஏன்? சில சமயங்களில் பொதுவிதிகள் கூட மறுக்கப்படுகின்றன. இவையெல்லாம் மக்களாட்சி முறைக்கு உடன்பாடானவை அல்ல. திருக்குறள்