பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடிகளார் மடல்



471


ஆம்! ஆம்! இனிய செல்வ, மகாபாரதக் கதையில் தொடக்கமே அதுதான்! ஆம்! அன்று தருமன் நாட்டை வைத்துச் சூதாடினான். இனிய செல்வ, உன் கேள்வி புரிகிறது! அன்று என்ன என்று கேட்கிறாய்? ஆம்! இன்றும் நாட்டை பணயம் வைத்துத்தான் அரசியல் நடத்துகிறார்கள். ஆனால் சூதாட்டம் என்ற பெயர் இல்லை! புனைவுகளுக்குப் பெயர்போன நூற்றாண்டல்லவா இது! ஆதலால், இன்றைய சூது பன்னாட்டு மூலதனக் கடன், திறந்த வெளிச்சந்தை, டங்கல் ஒப்பந்தம் என்ற பெயர்களில் நடக்கின்றன. பொதுத்துறை பலவீனம் என்று பழி சுமத்தித் தனியார் துறை ஊக்குவிக்கப் பெற்று வருகிறது. இனிய செல்வ, இந்தப் போக்கு நீடித்தால் இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தியா இருக்கிறதா அல்லது காணாமல் போய்விடுமா? என்ற கவலை மேலோங்குகிறது. இனிய செல்வ, நெறிமுறை சாராத பொருள் தொடர்பான முயற்சிகள் அனைத்தும் சூதாட்டம் தான்!

ஆசை, சூதாட்டத்திற்குக் காரணம். அரசுக் கருவூலங்களில் பணம் இல்லை. அரசுக்குப் புதிய வருவாய் இனங்களைக் கண்டு திட்டமிடவும் திறன் இல்லை. இந்த நிலையில் மக்களை அரசு சுரண்டி அரசினை நடத்த வேண்டியிருக்கிறது. இனிய செல்வ, மதுவருந்தல் கேடு பயக்கும். மக்கள் மேலும் ஏழைகளாவார்கள். நோய்களுக்கும் இரையாவார்கள். ஆனால், ஆள்பவர் சொல்கிறார்கள், ஆண்டுக்கு 640 கோடி வருகிறது என்று! மக்கள் 6000 கோடி ரூபாய்க்கு மேல் குடித்தால்தான் அரசுக்கு 640 கோடி ரூபாய் வருமானம் வரலாம். மக்களை ஏழைகளாக்கி அரசுக்கு வருமானம் வருவதில் என்ன பொருள் இருக்கிறது, அல்லது நியாயம் இருக்கிறது? இது ஒருவகைச் சூதாட்டம்! நலம் செய்வது போலத் தீமை செய்வது. வாழும் மாந்தனின் அறிவை, அறிவறிந்த ஆள்வினையைப் பறித்துக்கொண்டு வீதியில் நிறுத்துவது.