பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 3.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கை நலம்



41


வாயில்கள் மிகுதி. ஒருநாடு விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்பர்; முதலீடு செய்வர்.

அதுபோல ஒரு வீட்டினர் விருந்தோம்பும் பண்பில் சிறந்து விளங்கினால் அந்த வீட்டினருடைய வளர்ச்சியில் விருந்தினர் பங்கேற்பர். ஒரு குடும்பத்தினர் விருந்தோம்புதலில் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் வயலில் விதை பாவவில்லை. விதையில்லை அல்லது காலம் கிடைக்க வில்லை. வந்த விருந்தினர்கள் வாளாவிருக்க மாட்டார்கள். விருந்தினர்களும், அந்தக் குடும்பச் செல்வத்தின் பயனை நுகர்ந்தவர்களும் வாளாவிருக்க மாட்டார்கள். தாமே வலியச்சென்று அக்குடும்பத்தினரின் வயலில் விதையை விதைப்பார்கள். இஃது அறஞ்சார்ந்த வாழ்வியல் முறை. இதனைத் திருக்குறள்

"வித்துமிடல் வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்”

(85)

என்று கூறும், ஆதலால் எல்லைகளைக் கடந்து பழகுக. நட்பினைக் கொள்க; உறவாகுக; உவந்து உண்பித்துப் பழகுக. இதுவே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு அடிப்படை.

12. மோப்பக் குழையும் அனிச்சம்!

மானிடர் உயிர்ப்பில் வெளிவிடும் காற்று வெப்பத் தன்மையுடையது. இந்த வெப்பத்தைத் தாங்க முடியாத நிலையில் அனிச்சம் என்ற மலர் குழைந்து கெடும். அனிச்சம் நரம்புகளின் அமைவு பெறாத மென்மையான மலர். அதனால் மோப்பக் குழைகிறது. அதனால் அனிச்சமலரை முகராமல் மூக்கிற்குச் சற்றுத் தொலைவில் வைத்து மணத்தை அனுபவிக்கலாம்; அழகை அனுபவிக்கலாம்; தன்மையை அனுபவிக்கலாம். இங்ஙணம் ஒரு மலரை அனுபவிப்பதற்குப் பதிலாக அதனை முகர்ந்து கெடுப்பதில் என்ன பயன்?

தி.4.