பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் வாழ்க்கைச் செயல்முறைக் குறிப்புகள்



103



உலகத்துக்கு இசைந்த வகையில் ஒழுகக் கற்காதவர்கள் பற்பல கற்றாராயினும் அறிவு இல்லாதார் என்றே கருதப்படுவர்.

திருக்குறளில் இஃதொரு சிறந்த குறள்; உலகம் என்பது மாற்றத்திற்குரியது; மாறிக் கொண்டே வருகிறது. உலகத்தில் மாற்றங்களிருந்தால்தான் வளர்ச்சியிருக்கும். ஒவ்வொரு வரும் அந்தந்தக் காலச் சூழலுக்கேற்ற ஒழுகலாறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். நடைமுறைக்கு ஒவ்வாத பழைய பழமைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதில் பயனில்லை. ஆயிரம் கற்றும் உலகியல் நடைமுறைக்கு இசைந்து வாழாது போனால் என்ன பயன்?

சான்றாக, ஒருகாலத்தில் சாதிமுறை இருந்தது. அவற்றிற்கேற்ப அன்றைய நடை முறைகள் கற்பிக்கப்பெற்றன. இன்றைய உலகம் பிரிவுகளை வெறுக்கிறது; உயர்வு தாழ்வுகளை ஒதுக்குகிறது; மனித குல ஒருமைப்பாட்டை விரும்பி நிற்கிறது. இன்னும் பழைய சாத்திரங்களின் பெயரால் சாதிகளைக் காப்பாற்ற நினைப்பவர்கள் உலகத்தோடு ஒட்டஒழுகக் கற்காதவர்கள். ஆதலால், நாடொப்பன செய்க. உலகத்துக்கு இசைந்து வளர்க! வாழ்க!

15. பிறனில் விழையாமை

(காமம் மீதூர்ந்து மற்றொருவனுக்கு வாழ்க்கைத்துணை நலமாக அமைந்திருப்பவளை விழைதல் கூடாது. இங்ஙனமின்றி விழைவதால் சமூக இனங்கள் கெடும். கலகமும், கொலையும் வளரும். மன்பதை இன்பமும், அமைதியும் தழுவிய வாழ்க்கையை இழக்கும்.)

பிறனில் விழைவோர் அறத்தையும் இழக்கின்றனர். பிறர் வீட்டுக் கடைவாயிலில் நின்று, அச்சத்தால் விரும்பிச் சென்ற இன்பத்தையும் இழக்கின்றனர். அதனால் இருந்தும் இறந்தார்போல் ஆகின்றனர். பிறன்மனை விழைவால்