பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

326

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


காணப்படுகிறது. முதல் வகையினரின் வாழ்க்கை முறையில் அந்த வாடையும் இல்லை. இருந்திருந்தால், துறவி கைப்பட்ட பொருள் இந்த நாட்டு மக்களது வாழ்க்கைக்கு உணவாக கல்வியாக, மருந்தாகப் பயன்பட்டிருக்கும். அப்படிப் பயன்படாமல் வீணான ஆடம்பரங்களுக்கே அப்பொருள் பயன்பட்டு, இழக்க வேண்டிய ‘யான்’, ‘எனது’ என்ற இரண்டும் ஏற்றமுடன் கொலுவிருப்பதைக் கண்டால், வள்ளுவர் தப்பிப் பிழைக்க விடுவாரோ?

‘வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று’.

273

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது.

துறவு என்பது எங்கோ இருக்க வேண்டியவர்களுக்கு இருக்கின்ற இயல்பல்ல. சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் கூடத் துறவுணர்வு தேவை. காதல் வாழ்க்கைக்கும் கூட ஓரளவு துறவு தேவை. காதலன் காதலி மகிழ்வுக்காகச் சிலவற்றைத் துறக்கிறான். காதலி தாயான பின்பு தனது குழந்தைக்காகச் சிலவற்றைத் துறக்கிறாள். இங்ஙனம் வேண்டியாங்கு வேண்டியவாறு துறவு மனப்பான்மை தலைகாட்டாத குடும்ப வாழ்க்கை இன்பம் தராது. ஊரொடு தழுவி வாழும் இயல்பற்ற குடும்ப வாழ்க்கை இன்பம் பெருக்காது. துன்பமே சூழும். குடிகளைத் தழுவாத கோயில்கள் திருவருள் திருவோலக்கம் இருக்கும் கோயில்கள் அல்ல. சைத்தான் குடியிருக்கும் கோயில்களேயாகும். மன்பதைகளைத் தழுவிக் காக்காத மடங்கள் மடங்களல்ல. புலனுகர்வைத் திசைமாற்றி விடுதலில் துறவும், துறவில் அருளும் தோன்றுகிறது. இந்த அருளுணர்வே வையகத்தை வாழ்விக்கும் அமுது.