பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவள்ளுவர் காட்டும் அரசியல்



335


கூறுகின்றனர். ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் நாட்டின் வருமானம் உயர்ந்தும் நாட்டுமக்களின் வறுமை மாறவில்லை. ஏன்? பெருகி வளர்ந்த நாட்டு வருமானம் உழைத்தோருக்கும், தேவையுடையோருக்கும் வழங்கப் பெறாமல் அல்லது கிடைக்காமல் முதலாளித்துவ உலகம் தனக்கு உரிமைப்படுத்திக் கொண்டது. வள்ளுவர் வகுத்த அரசியல் நடைமுறைப்படுத்தப் பெறுமானால் இந்தக் குறை நீங்கும்.

திருவள்ளுவர் காட்டும் அரசியலில் தனிமனிதன் அரசுக்கு அடிமையல்லன். அவன் முழு உரிமையுடைய ஒரு குடிமகன். இத்தகைய குடிமக்களை அரசு பெற்றாலே, அஃது அரசு என்ற இலக்கணத்தைப் பொருந்துகிறது. திருவள்ளுவர் காட்டும் அரசியலில் தனிமனிதன் அரசுக்கும் தனது கடமையைச் செய்கிறான்; அதுபோலவே அரசினிடமிருந்தும் உரிமையைப் பெறுகிறான். திருவள்ளுவர் காட்டும் அரசியலில் சமுதாயக் கூட்டமைப்பு-ஒத்த தறிந்து வாழும் ஒப்புரவு இயல் வாழ்க்கை உண்டு. திருவள்ளுவர் காட்டும் அரசு, குடிகளைக் காக்கும் அரசு; குடிகளிடத்தில் குற்றம் தோன்றாதவாறு தன் குற்றம் நீக்கித் திகழும் அரசு. திருவள்ளுவர் காட்டும் அரசியலில் இச்சைமொழி பேசுவோருக்கு இடமில்லை; இடித்துத் திருத்துவோருக்கே ஏற்றம் உண்டு. திருவள்ளுவர் காட்டும் அரசு பொருளை ஈட்டும் அரசு மட்டுமன்று. பொருளை வகுத்தும் வழங்கும் அரசு. திருவள்ளுவர் காட்டும் அரசியல் வையகத்தில் மலருமானால் துன்பம் நீங்கும்; இன்பம் பெருகி வளரும்.