பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நின்று விடுவானோ என்று அஞ்சி இது உனக்குப் பரம்பரையாக உள்ள சொத்து இதனோடு எல்லையை நிறுத்தி விடாதே என்று கருதி "மன்னும் இமயமலை எங்கள் மலையே!” என்று பாடுகின்றான். ஆக, இமயமலையின் மீது இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் உரிமையை உண்டாக்குகிற குரலாக இருந்தது.

நாமிருக்கும் நாடு நமது என்பது அறிந்தோம் - இது
நமக்கே உரிமையாம் என்பது அறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமைசெய்யோம் - பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்.

(ஆடுவோமே)

நாட்டுப்பற்று வேண்டும்

நாடு விடுதலை பெற்று விட்டது. இந்தவகையில் பாரதியின் கனவு நனவாகி விட்டது. ஆனால், எந்த மக்களுக்காக விடுதலையைக் கேட்டானோ விரும்பினானோ அந்த மக்கள் இன்னும் விடுதலை பெற்றபாடில்லை. அவர்கள் தன்னல நயப்பிலும் தற்சார்பான வாழ்க்கையிலும் மீண்டும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களுடைய வீட்டைவிட்டு வெளியே விதி என்று ஒன்று இருக்கிறது, வீதியைத் தழுவிய ஊரும் நாடும் இருக்கின்றன என்கிற விரிந்த பரந்த மனப்போக்கு இன்னும் உருவாக்கப்பட வில்லை.

இந்தத் துறையில் அவனுடைய கனவுகள், நனவாவதற்கு உரியவாறு படித்தவர்கள், சான்றோர்கள் பொது மக்கள் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். பாரதநாடு விடுதலை பெற்ற திருநாள் இந்த நாட்டின் தேசியத் திருநாளாக வேறு எந்தத் திருநாளையும் விட ஒப்பற்ற திருநாளாக வீடுகளிலும் வீதிகளிலும் கோயில்களிலும் கூட விளங்க வேண்டும்.