பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

141


கோபத்தை எந்தத் தமிழறிந்த சான்றோரும் பெறாததால் தமிழ் இன்னும் பட்டிமண்டப மொழியாகத்தான் இருக்கிறதே தவிர அது அறிவியல் மொழியாக தொழிலியல் மொழியாக பொருளியல் மொழியாக வளரவில்லை. "வானம் அளந்ததனைத்தும் அறிந்து வளர்மொழி வாழியவே” என்று பாடுகிறான். ஆக அனைத்தும் தமிழில் முடியும் என்பதே பாரதியின் நம்பிக்கை.

கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
பல்விதமான சாத்திரத்தின் மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு.

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை, மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்.

மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும்

இன்றைக்கு இந்தியா ஒரு நாடு என்ற உணர்வைப் பெற முடியாமல் - மொழிச் சிக்கலுக்குத் தீர்வே காணாமல் இருக்கிறோம். எந்த வகையிலாவது மொழிச் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் ஒத்திப் போடுவது ஒரு தலைமுறையின் அறிவுப் பயிற்சியைத் தடைசெய்வது போலாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஒரு தலைமுறை அறிவுத்துறையில் எந்தத் துறையிலாவது பின் தங்கிப் போனால் அது பல தலைமுறைகள் பின் தங்கிப் போகின்ற குறையை உடையதாக அமையும். அந்தத் துறையில் நம்முடைய அறிஞர்கள் சீக்கிரமாகத் தீர்வு காண வேண்டும். அவர்கள் எப்படித் தீர்வு காணவேண்டும் என்று என்னுடைய கருத்தை வலியுறுத்தத்-