பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

165



இனியொரு விதி செய்வோம்


பாரதி கனவு நனவாவதற்காகப் பாடினான்; பாரதப் பொருளாதார மறுமலர்ச்சிக்காகப் பாடினான்; சமத்துவத்திற்காகப் பாடினான். எல்லோருக்கும் உணவு வேண்டுமென்று சொன்னான். "இனியொரு விதி செய்வோம். அதை எந்தநாளும் காப்போம் தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று பாடினான்.

காரணம், ஒருவன் ஏழையாக இருப்பதும் செல்வனாக இருப்பதும் தனிப்பட்ட வாழ்க்கையின் பொறுப்பு மட்டு மல்ல. அவன் காலத்தின் சமுதாயத்தினுடைய அமைப்பு என்று கருதினான். எனவே ஏழ்மைப்படுத்தப்பட்ட சமுதாயத்தை உருவாக்கிய ஒரு சமுதாயத்தின் மீது அவனுக்குக் கோபம் வருகிறது. எனவே ஜகத்தினை அழித் திடுவோம் என்று சொன்னான். அந்த வறுமை எதிர்ப்பை - அந்த வறுமை எதிர்ப்புப் போராட்டத்தைக் கூர்மைப்படுத்தி எல்லாரும் எல்லாமும் பெறுகிற புதிய சமுதாயத்தை அமைக்க வேண்டும்.

மகிழ்ச்சி நிறைந்த சமுதாயம் பொதுவுடைமைச் சமுதாயம் என்று அவன் பாடுகிறான். அனைத்து, பாரத சமுதாயமும் பொதுவுடைமையாக இருக்க வேண்டும் என்று சொன்னான். ஒருவர் உணவை ஒருவர் பறித்து உண்கின்ற கொடுமை கூடாது என்று சொன்னான். அந்தப் புது நியதியை - பொது நியதியை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதற்கு முன்னாக இந்த நாட்டில் தொழிற்புரட்சி ஏற்பட வேண்டும் என்று சொன்னான். உழவனையும் தொழி லாளியையும் வாழ்த்தினான்; பாராட்டினான். அவனுக்கு அரியணை கொடுக்க ஆசைப்பட்டான். "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்று பாடினான்.