பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

177



உண்மைதான். பாரதி தமிழ்ச்சாதியைப் போற்றுகிறான் - புகழ்கின்றான் - செம்மாந்து பாடுகிறான். ஆனால் பாரத சமுதாயத்தை மறக்கவில்லை.

சாதி வேறு, சமுதாயம் வேறு. மாம்பழம் என்று சொல்லும்போது கிளிமூக்கு, மல்கோவா, ருமேனியா முதலிய பல சாதிகள் நினைவுக்கு வருகின்றன. மாம்பழச் சமுதாயத்தில் அமைந்த கிளிமூக்கு, மல்கோவா போன்றன வெல்லாம் பல்வேறு இனங்கள்-சாதிகள். அது போலப் பாரத சமுதாயத்தில் தமிழினம் ஒருபிரிவு; சாதி, அது போலவே ஆந்திர இனம், கன்னட இனம், மலையாள இனம், விங்காள இனம் முதலிய பல உட்பிரிவுகளும் உள்ளன. இதனை நன்கு உணர்ந்துதான் பாரதி தமிழ் மக்களைக் குறிக்கும்போது தமிழ்ச்சாதி என்றும், தமிழர் உள்ளிட்ட பாரத மக்களைக் குறிக்கும்போது பாரத சமுதாயம் என்றும் பாடுகிறான்.

"விதியே தமிழ்ச்சாதியை எவ்வகை விதித்தாய்”


என்று விதியை நோக்கி வினவும்போது விதித்தாய் என்று தமிழ்ச்சாதியைக் குறித்தவன், பாரத மக்களை வாழ்த்தும் போது "வாழ்க வாழ்க பாரத சமுதாயம் வாழ்கவே" என்று வாழ்த்திக் களிப்படைகின்றான். ஆகவே தமிழினத்தைத் தமிழ்ச்சாதி என்றும், பல்வகை இனங்களையும் உள்ளடக்கிய பாரத மக்களைப் பாரத சமுதாயம் என்றும் வேறுவேறு பிரித்துக் காட்டுவதன் மூலம் சிறப்பாகப் பாரத தேசீயத்தைச் சார்ந்து நிற்கின்றான்.

அடுத்து பாரத நாட்டைப் பாடும்போது பெற்ற உணர்ச்சி உணர்வைக் காட்டிலும் தமிழகத்தைப் பாடும் போது வெளியிடும் கவிதை உணர்ச்சி மிகச் சிறந்ததாக உள்ளது என்று குறித்து, அதன் மூலம் தமிழ்த் தேசீயம் என்ற குறுகிய இடத்துள் பாரதியை அடைத்தார்கள்.

தன்மொழி, தன்னாடு இவற்றைப் பாடும்போதும், பேசும்போதும், எண்ணும்போதும் உணர்ச்சி மிகப் பாடு-