பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


-தாகும். அவர்களை நினைக்க சமூக அறிவு நூல் போதும் என்கின்றனர். அது தவறு. பள்ளியில் சமூக அறிவு நூல் பாடத்தில் அவர்களது வரலாற்றைத்தான் படிக்கலாம், வினாவுக்கு விடை எழுதலாம்; மதிப்பெண்கள் பெறலாம். உள்ளத்தில் எழுச்சியை - உணர்வைப் பெற முடியுமா? நவீன ஆசிரியனும் சிறு கதை ஆசிரியனும்கூட அத்தகைய எழுச்சியைத் தரமுடியாது. ஒரு நல்ல கவிஞன் - மக்கள் கவிஞன் தான் அந்த எழுச்சியை ஊட்டமுடியும். எத்தனையோ பேர் சுதந்திரப் போராட்டக் காலத்தில் பக்கம் பக்கமாகச் சுதந்திரம் பற்றியும் தேசபக்தி பற்றியும் எழுதினர். இருந்தாலும் வங்கக் கவிஞனும் தமிழகம் தந்த சிங்கக் கவிஞனும் தந்த எழுச்சியை - ஊட்டிய உணர்வை ஊட்ட முடியவில்லை. இன்று படித்தாலும் உடல் புல்லரிக்கிறது - உள்ளம் துள்ளி எழுகிறது. இத்தகைய உணர்வை வெறும் வரலாற்று நூலோ - வரலாற்று ஆசிரியனோ ஊட்ட முடியாது. அத்தகைய சிறந்த உணர்வைப் பெற அப் பாடல்கள் தான் வேண்டும்.


"ஆயிரம் உண்டிங்கு சாதி எனில்
அந்நியர் வந்து புகல் என்ன நீதி-"


என்று கேட்டான் பாரதி, அவன் ஆங்கிலேயரை மட்டும் பார்த்துக் கேட்கவில்லை. இன்று நம் எல்லைப்புறத்தில் ஓயாது தொல்லைக் கொடுத்துக்கொண்டு இருக்கும் பகைவரைப் பார்த்தும் அவன் இதே வினாவை எழுப்புவான், உயிரோடு இருந்தால், அவன் அன்று எழுப்பிய வினா இன்று தென்னகத் தலைவர்கள் உள்ளத்தில் பீறிட்டு எழுந்து நின்றதைக் கண்டோம். நாட்டுப் பிரிவு பற்றிய எண்ணம் தூக்கி எறியப்பெற்றது அந்த நேரத்தில் அனைவர் பார்வையும் இந்தப் பாரதத்தைக் காக்கத் திரும்பியது. இங்ஙனம் பல கட்சித் தலைவர்களையும் மக்களையும்