பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/23

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை
தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

குருமகா சந்நிதானம் அருள்நெறித் தந்தை தவத்திரு அடிகளார் பெருமானின் அற்புதப் படைப்பாக சங்க இலக்கியம் முதல் பாரதி - பட்டுக்கோட்டை வரை தொகுப்பு நூல் மலர்கின்றது. தமிழர்கள் வாழ்க்கை வாழ்வதற்கே! "வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!" என்பது அப்பர் பெருமான் வாக்கு! சங்க இலக்கியத்தின் வாழ்வியல் சிந்தனையை நம் குருமகா சந்நிதானம் தமக்கே உரிய பொதுமைப் பார்வையில், புதுமைப் பார்வையில் முற்போக்குச் சிந்தனையில் சமூகத்தினைச் சிந்திக்கச் செய்கின்றார்கள்.

உலகத்தில் இருவித வாழ்க்கை! இருவேறு உலகங்கள்! ஒருபுறத்தில் மகிழ்ச்சி! மறுபுறத்தில் துக்கம்! ஒருபுறத்தில் ஆனந்தம்! மறுபுறத்தில் அவலம்! இப்படி இரு வேறு உலகங்களை ஒரு படைப்பாளி படைத்திருப்பானா? அப்படிப் படைத்திருந்தால் அவன் பண்பில்லாதவன் என்று ஆண்டவனை எதிர்த்து, சமூக நன்மைக்குக் குரல் கொடுத்ததுதான் தமிழனின் குரல். “எல்லாம் விதிவசம்! அனைத்தும் ஆண்டவன் படைப்பு! செல்வம், வறுமை, நோய், துன்பம் அனைத்தும் இறைவன் படைப்பே!" என்ற சிந்தனை மனித முயற்சியை முடமாக்கும். இந்த புறநானூற்றுப் பாடலுக்கு அடிகள் பெருமான் புதிய விளக்கம் தருகின்றார்கள். உலகம் இன்னாததாக இருக்கலாம். ஆனால், இன்னாமையை அப்படியே தாங்கிக் கொள்ள வேண்டும் அல்லது தாங்கும் சக்தியற்ற