பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி அமைத்த பாலம்

299


இதனால் 'பாரதி கோயில் வேண்டா என்று சொல்லி விட்டார் என்று கூறிவிட முடியுமா? கோயில் இருந்தது. காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் பக்தர்கள் இல்லை யானால் கோயிலால் என்ன பயன்? கோயில் வேண்டும். தொழுது தூமலர் தூவி அழுது அரறும் அடியவர்களும் வேண்டும்.

இங்கு உழைக்காமல்-பரம்பரைச் சொத்தைக் கொண்டு உல்லாசமாக வாழ்பவனுக்குத்தான் சமுதாயத்தில் பாராட்டும் மதிப்பும் இருந்தது. இந்த இழி நிலையை ஒழிக்க வேண்டும் என்று பாரதி விரும்பினார். எனவே,

'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்’

என்று பாடினார். உழைத்துச் சொத்து சேர்ப்பவனையே பாரதி பாராட்டுகிறார். உழைக்காமல் உண்டு, உறங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறவர்களை நிந்தனை செய்வோம் என்று பேசினார்.

கங்கையையும் காவிரியையும் இணைத்துப் பாடினார் பாரதியார். இதன் மூலம் வணிகத் தொடர்பு பற்றிப் பேசுகிறார். காசி நகரப் புலவர் பேசும் உரையைக் காஞ்சியிற் கேட்பதற்கோர் கருவி செய்வோம் என்பதன் மூலம் வளர்ந்து வரும் விஞ்ஞானப் புதுமையைக் கையேந்தி வரவேற்றார். சாதி மத இன வேறுபாடுகளை யெல்லாம் தகர்த்தெறிந்து, "பாரதநாடு, பாருக்கெல்லாம் திலகம்; நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்" என்று பாடியதின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுணர்வை வலியுறுத்தினார். பழம் நாகரி கத்தை-பண்பாட்டை அடித்தளமாக வைத்துக் கொண்டு, போற்றுதற்கரிய புதுமைகளைப் பாடினார்-எனவே புதுமைக் கவிஞர் பாரதி, பழமையோடு புதுமையை இணைத்துஒட்டிப் பாடினார் என்று கூறுவதே சரியானது.