பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதிதாசனின் உலகம்

341


கற்கும் மாணவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கொடுத்து அரசாணை பிறப்பித்தார். அதைத் தமிழ் நாட்டு மக்கள் எதிர்த்தனர்; தமிழிளைஞர்கள் எதிர்த்தனர்; ஏன், இன்று தமிழகத்து ஏடுகள் பலவற்றில் கலப்புத் தமிழே காட்சியளிக்கிறது. கொச்சைத் தமிழே கோமாளி நடனம் ஆடுகிறது! தட்டிக் கேட்பாரில்லை! பாவேந்தன் "தமிழ் என் உயிர்" என்றான். "தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்” என்றான். ஆனால், இன்று நடப்பது என்ன? "மறைமலையடிகள் தமிழும் தமிழ்தானா?” என்று வினா எழுப்புகின்ற பிறவிகள் நம்மிடையில் வாழ்கின்றனர் என்பதுதான்.

இன்று 'தமிழ் வாழ்க!' என்பது மேடை முழக்கம் மட்டுமே! தமிழ்த் தொண்டு செய்வாரைக் காணோம்! ஏன், தமிழால் பிழைப்பு நடத்துபவர்கூட, அவர்தம் வீட்டுப் பிள்ளையை ஆங்கிலம் கற்கவே அனுப்புகின்றனர். இன்று தமிழுணர்வு பட்டுக் கொண்டிருக்கிறது. பாவேந்தன் நூற்றாண்டு விழாவை யொட்டியவாது நமது தமிழுணர்வை, தமிழின உணர்வைப் புதுப்பித்துக் கொள்வோமாக! நாமமது தமிழரெனக் கொண்டு வாழாது, தமிழராகவே வாழ்தல் வேண்டும். தமிழ்த் தாய்க்குத் தமிழ் நாட்டின் அரியணையை மீட்டுத் தந்து அமர்த்துதல் வேண்டும். கி.பி. 2000க்குரிய புதுமை நலன்கள் அனைத்தும் பெற்று வளரும் மொழியாகத் தமிழை வளர்க்க வேண்டும். இப்பணிகளைச் செய்து முடிக்கத் தமிழன் வளரவேண்டும். தமிழர்களின் வளர்ச்சியே தமிழின் வளர்ச்சி! தமிழின் வளர்ச்சியே தமிழ்ச் சமூக வளர்ச்சி! இப்பாடம் நமது வாழ்வுப் பாடமாதல் வேண்டும்.

இனி, குடும்ப விளக்கின் தலைவி கேட்ட வினாவுக்குத் தலைவன், விடை சொல்வதைப் பார்ப்போம்! என்ன விடை சொல்கிறான்? வருவாய்க்குத் தக்கபடி ஒரு தொகையைத் "தமிழர் கழகத்திற்கு வழக்கமாக வழங்கி வருவதாக விடை கூறுகின்றான். தலைவி மகிழ்ச்சியுறுகிறாள். இன்னும் தமிழ்