பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆள்தான் ஆறுமுகம்” என்று எழுதிச் சிரிக்க வைக்கிறார்; சிந்தனை செய்யத் தூண்டுகிறார். இச்சையுணர்ச்சிகளுக்கு ஏற்ற சேர்க்கையைத் தேடாமல் உயர்வு பொருந்திய - வளர்ச்சிக்குரிய சேர்க்கையை நாடிச் செல்ல வழி நடத்துகிறார்.

சமூகத்தின் வளர்ச்சிக்காகப் பல உயர்ந்த கருத்துக்களைப் பலர் தந்திருந்தாலும் அவை முறையாக வளரவில்லை. செயல்படுத்தப் பெறவில்லை என்று அண்ணா கருதுகிறார். புராணங்களே ஆனாலும் அவற்றிலுள்ள கருத்துக்கள் பல நாளாவட்டத்திலே பொது அறிவு பரவப் பரவ மறைந்து விடுவதாகவும், சில மறைக்கப்பட்டு விடுவதாகவும் கூறி, சில கருத்துக்கள் உரம் குறையாமல் உள்ளன, ஏன்? என்றும் கேட்கிறார்.

இவற்றிற்குச் சிலர் உரம் தருகிறார்கள் என்று கூறி ஏனென்றும் காரணம் காட்டுகிறார். அப்படி உரமிட்டு வளர்க்கப்படும் கருத்துக்கள் எவை என்றும் எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு சிறு கூட்டத்தின் சுகபோக வாழ்க்கைக்கு வழி செய்கின்றனவும், ஆடாமல் அசையாமல், ஓடாமல் உழைக்காமல் எக் கவலையுமின்றி வாழ வழி வகுக்கின்றனவும் ஆகிய கருத்துக்களை எந்தப் புதுமையும் தாக்காமல், வளரும் காலத்தினாலும் மாற்ற முடியாமல் அவை இம்மியும் கெடாதபடி ஓயாது உழைத்து கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர்.

நல்லூழ் இன்மையின் காரணமாக, பிரச்சார எந்திரமும் இந்தச் சிறு கூட்டத்தினரின் ஏகபோக இயக்கமாக இருக்கிறது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.

இந்தக் கூற்றுக்களின்படி புராணங்களின் மீது நேரிடையாக அண்ணாவுக்கு வெறுப்பில்லை யென்பதையும், அவை, காலத்திற்குக் காலம் சமூக வளர்ச்சிக்குத் துணை