பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



மேலும் புதிய ஆத்திசூடியை பரம்பொருளை வாழ்த்தித் தொடங்குகின்றான். இந்தப் பரம் பொருள் வாழ்த்து டிறை மொழியென ஏற்றுப் போற்றத் தக்கது. இப்பரம்பொருள் வாழ்த்தை நாள்தோறும் படித்தல், ஒதுதல் எல்லாச் சமய நிறுவனங்களிலும் நிகழ்தல் வேண்டும். எல்லாக் கல்விக் கூடங்களிலும் இதனையே கடவுள் வாழ்த்தாக்கலாம். இப்பாடலை நாள்தோறும் ஓதுவதனால் இறைமை உணர்வு வளரும். பொதுமையுணர்வும் வளரும். அமர வாழ்வையும் அடையலாம்.

பாரதி கிருதயுகத்தின் பரம்பொருள் வாழ்த்தெனப் பாடித்தந்த பாடல் இதோ!

ஆத்திசூடி, இளம்பிறை யணிந்து
மோனத்திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம் பொருள்
ஒன்றே அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.

பாரதி கலியுகத்தில் பிறந்தவன்; வாழ்ந்தவன். கலியுகத்தில் தவம், புண்ணியம், யோகம், யாகம், ஞானம் என்ற சொற்கள் தாராளமாகப் புழங்கின. இவையனைத்தும் இந்த நாட்டு மக்களை இம்மியும் உயர்த்தவில்லை. புல்லிய அடிமைச் சகதியில் புரண்டு பொய்ம்மையிலே மூழ்கித் துன்பத்திலே துவண்டு வாழ்ந்தனர். ஏன் இன்றும்கூட நம்மில் சில பெரியார்கள் இந்தப் பொருந்தாப் பொய்ம்மை நெறியையே நெறியெனக் காட்டி விளம்பரம் செய்வதைக் காணத்தான் செய்கிறோம். கேட்கத்தான் செய்கிறோம்.