பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

79


கடவுள் பலவாகியது, மதங்கள்தோறும் வேறு வேறாகியது கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள் செய்த சிறுபிள்ளைத்தனம். அதனால், கடவுள் ஒன்றே என்னும் நம்பிக்கை வேண்டும். கட்டுக்கதைகளுக்கு அப்பாற் பட்டதாக, பேராற்றலுடையதாக, பேரின்பம் உடையதாக, எங்கணும் நீக்கமற நிறைந்திருப்பதே கடவுள். நாம் எல்லாரும் கடவுளின் மக்கள். ஆம்! ஒரே கடவுளின் மக்கள்தான்!

பாரதியாரின் தத்துவம் விரிந்தது; பரந்தது. சாதிகளைக் கடந்தது; மதங்களைக் கடந்தது; கடவுளின் மக்கள் நாம் அனைவரும். இந்த அரிய கொள்கை இந்தியாவில் வெற்றி பெறவில்லையே! இந்திய சமூகம் இன்று பாரதியின் அடிச்சுவட்டில் நடைபோடவில்லையே! சாதிகளைக் காப்பாற்ற சங்கங்கள், மாநாடுகள் அமைத்து ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்களே! சாதிகள், மதங்கள் தம்முள் முரணி மோதிக் கொள்கின்றனவே! இந்து, கிறிஸ்துவர், முஸ்லீம் என்கிற பிரச்சினைகளை வைத்தே எத்தனை இயக்கங்கள்! போராட்டங்கள்! கலகங்கள்! அடக்கு முறைகள்! ஏன் இந்த அறியாமை?பாரதி, இந்த நாட்டு மக்களுக்குத்தானே சொன்னார். சாதிகள் மட்டுமா? சாதிகள் வாரியாக கடவுள் படைப்பு விளையாட்டுக்கள்! இன்று இந்தியாவில் சராசரி ஒரு நபருக்கு 10 கடவுள்களுக்குக் குறைவில்லை. ஆனால், நடப்பது என்ன? உயிர்க்குலப் பகை வளர்கிறது! வறுமை வளர்கிறது. கடவுளை வழிபடும் நாட்டு மக்களுக்கு இது என்ன தண்டனையா?

இந்த உலகு இன்பக்கேணி என்று பாராட்டுகின்றான் பாரதி. இந்த உலகை இன்பக்கேணியாக அமைக்கவேண்டும். துன்பத்தின் சாயலையும் துடைத்தெறிய வேண்டும். கடவுள் ஒன்று என்று நம்பு! கடவுளை வழிபடு! கடவுள் வழியில் நட! கடவுளை நினைப்பற நினைப்பதன் மூலம் கடவுளுடைய பேரறிவு, பேராற்றல், பேரின்பம் ஆகியவற்றை மானிட சாதி உரிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.