பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்பர் விருந்து

231


புல உணர்வே மூலமும் முதலுமாக விளங்குகிறது. அது போலவே உயிர் வாழ்க்கை, அவலத்தில் ஆழ்தலுக்கும் சுவையே காரணம். தனிமனிதப் போராட்டமானாலும் சரி, சமுதாயப் போராட்டமானாலும் சரி, ஆழச் சிந்தித்தால் சுவைப்புலன்களை மையமாகக் கொண்டே தோன்றியிருக்கும்.

மனிதரில் பெரும்பாலோர் ஏன், எல்லாருமே நாவின் சுவைக்கு ஆளாகின்றனர். இதில், அதீத மாமுனிவர்களைத் தவிர வேறு யாரும் விதி விலக்கல்லர். சுவையாக உண்பதற்கே வாழ்வதாக கருதிக் கொண்டிருப்போர் ஏராளம்! சோறே சொர்க்கமென்று வாழ்பவர்களும் உண்டு! இன்னும் கொஞ்சம் வளர்ந்தவர்கள் பால்சுவையில் ஈடுபடுகிறார்கள். பால்சுவையைச் சுவைத்து மகிழ்ந்து வாழ்கிறார்கள். நாச் சுவையை விட இந்தச் சுவையை ஆர்தல் நுட்பமானதாகும். பலர், சுவையுணர்வின்றிப் பால்வாழ்க்கை நடத்துகின்றனர். இஃதொரு கலை. அதனாலன்றோ திருவள்ளுவரும்,

                மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
                செவ்வி தலைப்படு வார்

என்றார். இந்த இரண்டு சுவையிலும் ஈடுபடத் துடிக்கும் மனிதர்களை எங்கும் காணலாம். இன்னும் சற்று வளர்ந்தவர்கள் இந்த இரண்டு சவையிலும் அமைதி கொள்வதில்லை. ஏன்? இவ்விரண்டையும் கூடத் துச்சமெனத் தள்ளவும் துணிவர். அவர்களுடைய சுவைப் பசி, ஆணை செலுத்துதல் ஆகும். பலரோடு பிறந்து வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரிலும் தன்னை உயர்த்தி விஞ்சியவனாகக் காட்டிக் கொள்ளுதல்; தன்னாணை கேட்டுச் செயற்படுவோரைக் கண்டு மகிழ்தல். இத்தகு சுவை நுகர்ச்சி கோடியில் ஒருவருக்கே ஏற்படும். அவர்களே பலர் புகழ விளங்குவார்கள்.