பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

390

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



காலால் மிதிக்க அஞ்சுகின்றார். தமது திருமுறையில் பல அடியார்களை நினைந்து பாடுகின்றார்.

திருநாளைப் போவாரைச் 'செம்மையே ஆய திரு நாளைப் போவார்' என்று பாராட்டுகின்றார். இங்ஙனம் அடியார்களைப் போற்றும் பாங்கு விழுமியது ஆகும். அடியார்கள் செய்த பிழைகளைப் பொறுத்தருளும் தலைவன் இறைவன் என்பதனை விளக்க ஒரு பட்டியலே தருகிறார்.

நற்றமிழ் வல்ல ஞான சம்பந்தன்
நாவினுக் கரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன்,நற் சாக்கியன், சிலந்தி
கண்ணப்பன் கணம் புல்லன் என்றிவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழ லடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூரு ளானே! (7.56.4)

இந்தப் பாடலில் குறிப்பிடப் பெற்றுள்ள அடியார்கள் நன்றே செய்தனர். ஆயினும் உலகோர் பார்வையில் குற்ற மெனக் கருதப்படுகிறது. திருஞானசம்பந்தர் செய்த குற்ற மென்ன? திருவிழிமிழலையில் திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு வழங்கிய இறைவன் திருஞானசம்பந்தருக்கு மட்டும் வாசியுள்ள காசாகத் தந்தருளினன்.

அப்பரடிகளுக்கு வாசியில்லாத காசு தந்தனன். இந்த வேற்றுமை நிலையைத் தாங்கிக் கொள்ளமாட்டாது இறைவனிடம் முறையிட்டு “வாசி தீரப்பாடி” வாசியில்லாத காசு பெற்றார் திருஞாசம்பந்தர்.

அதாவது அப்பரடிகள் வாசியில்லாத காசு பெற்ற மையைத் தாங்கிக் கொள்ளமாட்டாமை, இறைவன் அருளிய கொடையோடு மனம் நிறைவு பெறாமை ஒன்று.