பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/402

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
398
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

 பட்ட ஆற்றல் அவசியம் ஏற்பட்டபொழுது மற்றவர்கள் நலனுக்காகவே பயன்படுத்தப் பெற்றது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இந்த ஆற்றல் தற்சார்புக்காகப் பயன்படுத்தப் பெற்றதில்லை, சுயநலம் கடுகளவு சேர்ந்தாலும் பொது நலம் கெடும்; ஆன்ம நலம் கெடும். நாயன்மார்கள் வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் அவர்கள் தனிப்பட்ட முறையில் துன்புற்றுன்னர். ஆனால் மற்றவர்களுக்காக அற்புதங்கள் செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த சிவநேசச் செட்டியார் மகள் பூம்பாவை என்பவள் பாம்பு கடித்து இறந்து போனாள். பெற்றோருக்குப் பூம்பாவையின் மீது அளவற்ற பரிவு. பூம்பாவையின் பிரிவு தாங்க இயலாமல் துன்புற்றனர். பிரிவுத் துயரை ஆற்றிக்கொள்ளப் பூம்பாவை உடம்பை எரித்த சாம்பலை ஒரு பானையில் எடுத்து வைத்தனர். திருஞானசம்பந்தர் மயிலை கற்பகாம்பிகை உடனுறை கபாலீசுவரரை வழிபட வருகிறார். அதுபோது சிவநேசச் செட்டியார் பூம்பாவையின் சாம்பல் குடத்துடன் சென்று திருஞானசம்பந்தர் திருமுன் வீழ்ந்து வணங்கி, பூம்பாவையை எழுப்பித் தரும்படி வேண்டினர். சிவநேசச் செட்டியார் துன்பத்தைக் கண்டு திருஞானசம்பந்தர் கசிந்துருகி, “மட்டிட்ட” என்று பதிகம் எடுத்துப் பாடினார். பூம்பாவை உருப்பெற்று எழுந்தாள். நிறைமொழி மாந்தராகிய திருஞானசம்பந்தரின் மறை வாக்கால் உருவமே இல்லாத நிலையில் சாம்பல் உருவம் பெற்றது. -

அப்பரடிகள் திங்களுர் செல்கிறார். திங்களுர் அந்தணர் அப்பூதியடிகள் தமது இல்லத்தில் அப்பரடிகளுக்கு திருவமுது படைக்க விரும்புகிறார். அப்பரடிகளுக்குத் திருவமுது படைக்க வாழை இலை நறுக்கப் போன அப்பூதியடிகளின் மகன் மூத்ததிருநாவுக்கரசு நச்சரவம் தீண்டி இறந்து போகின்றான். அப்பரடிகள் திருவமுதருந்தத் தடை வரக்கூடாது என்று எண்ணிய பெற்றோர், மூத்த