பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 7.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
62
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
 

தூய்மையான இன்பத்தைத் தராது; அமைதியைத் தராது; அவலத்தையே தரும்; உயிரைச் செழுமைப்படுத்தாது; உருக்குலைக்கும். துய்ப்பிப்போரிடையேகூட இனிய உணர்வுடன் கூடிய இன்பக்கலப்பு இருக்காது. அங்கே சுயநலமே தாண்டவமாடும். அங்கே புணர்ச்சிக்கே இடம்; உணர்ச்சிக்கு இடமில்லை. இத்தகைய காமம் நரகத்தின் வாயில்.

எந்தை ஈசன், உமையொடு கலந்திருப்பதோ, காமத்தால் விளைந்ததன்று. தான் துய்க்க வேண்டும் என்ற விருப்பில் எழுந்தன்று. உலகுயிர்கள் போகம் துய்த்து மகிழ்ந்து வாழ அவன் அன்னை உமையுடன் கலந்து வாழ்கின்றான். இந்தக் கலத்தல் தண்ணளியின் பாற்பட்டது; இன்ப அன்பு வழிப்பட்டது. உலகு தழீஇய காதல். இங்குப் புணர்ச்சிக்கு இடமில்லை; உணர்ச்சிக்கு இடமுண்டு. இங்ஙனம் கலந்து வாழும் நெறி நாட்டிடையிலும் மலருமாயின் மண்ணகம், விண்ணகமாகும்.

இங்ஙனம், மங்கை பாகனாக விளங்கும் மூர்த்தியை முறையாக வழிபாடு செய்வோர் பொன்னினைப் பெறுவர்; பொருளினைப் பெறுவர்; போகத்தினைத் துய்ப்பர். அல்வழி அவாத் தணிந்து அருளியல் காட்சி தலைப்பட்டுத் திருவினைப் பெற்றுத் திருவருளில் திளைப்பர். இதுவே நம்முடைய நாயன்மார்கள் காட்டிய வாழ்க்கை நெறி.