பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


திற்குரிய உணவு, உழைப்பின் வழியேதான் படைக்கப்படுகிறது! உழைத்து உண்பது அறம்! உழைத்து உண்பது ஒழுக்கம்! அறிவின் ஆக்கத்தில் பின்னடைவு; உழைப்பில் பின்னடைவு! இங்ஙனம் துறைதோறும் பின்னடைவுகள் தோன்றின் நோய்க்கு ஆளாவது இயற்கை!

நோய்வாய்ப்பட்ட பிறகு நெஞ்சில் கவலை பிறக்கும்; துன்பமும் துயரமும் வருத்தும்; அமைதி விடைபெறும்; இன்பம் விலைப்பொருளாகிவிடும்; வாழ்க்கை கசக்கும். ஆதலின் பிற்படா நிலையில் நொடிகள் தோறும் துறை தோறும் முன்னேற்றத்தைப் பராமரிக்க வேண்டும். மாணிக்கவாசகர் நோய்க்கு எளிதில் இரையாகக்கூடிய அமைச்சுப் பதவியில் இருந்தார். அமைச்சுப் பதவி “கடின”மான பதவி. ஆன்ம நலன்களைக் கெடுக்கும். அதிகாரம் அமைச்சுப் பதவிக்கு உண்டு! இருக்கும் இடம் உயரமானது! பெரிய இடத்தில் சின்னப் புத்தி தலைகாட்டும். ஆனால், உடலும் ஆன்மாவும் எளிதில் நோய்வாய்ப்படும் நிலை, ஆன்ம நலன்களில் பிற்பட்ட நிலை!

பிற்பட்ட நிலை மாற்றப்படுதல் வேண்டும். முன்னேற்றம் தேவை. முன்னேற்றம் கருதிய வாழ்க்கைக்கு முதலில் உரிய சுற்றம் அமைய வேண்டும்! நல்ல பழக்கங்கள் வேண்டும்; வழக்கங்கள் வேண்டும். ஒருவருக்குக் கெட்ட பழக்கங்கள் எளிதில் விலை இல்லாமலே கூடக் கடை விதியில் கிடைக்கும்! ஆனால் நல்ல பழக்கங்கள் எளிதில் கிடைக்கா. வழக்கங்கள் சொல்லவே வேண்டாம்! நல்ல பழக்கங்கள்தான் நல்ல வழக்கங்களாக மாறுகின்றன. ஆன்மா சிறந்த நலன்களைப் பெற்று முன்னேற வேண்டுமாயின் நல்லோர் கூட்டு வேண்டும். நல்லோர் இணக்கம் வேண்டும். நல்லோருடன் பழகவேண்டும். அங்ஙனம் தேர்ந்தெடுத்துப் பழகும் நல்லோரும்கூட வழி வழி நல்ல மரபினராயிருந்தால் காலம், தேசம், வர்த்தமானம் அவர்களை மாற்றா. அவர்களே பழ அடியார்கள்; என்றும் நல்லவர்கள்! தற்காலிகமாக