பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிரந்தரம்! ஆதி! உயிர் நிரந்தரம்! ஏன்? ஆணவம் கூட, தன் கொட்டமடங்கிக் கிடக்கும். அதற்கும் கூட அழிவில்லை! அழிவில்லாத நிரந்தரமான கடவுள் சந்நிதியில் அழிவு ஏது? மாற்றங்களே நிகழும்! இறைவனையும் நீதியையும் சார்ந்து வாழும் உயிர்களும் நிலையாக இன்ப அன்பில் தங்கி இன்புறும்.

நீதி யாவன யாவையும் நினைக்கிலேன்
நினைப்பவ ரொடுங் கூடேன்
ஏதமே பிறந்திறந் துழல்வேன் தனை
என்னடி யான் என்று
பாதி மாதொடுங் கூடிய பரம்பரன்
நிரந்தர மாய் நின்ற
ஆதி யாண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டோமே!

(அதிசயப்பத்து-2)
திருவாசகத் தேன்

செய்து முடிக்க வேண்டிய பணிகளுக்கு ஏற்பத் திறம் வேண்டும். பணிகளின் பாங்கிற்கேற்பத் திறமை இருந்தாலே தலைமை, நிலை நிற்கும். மாணிக்கவாசகர் சிவன் எம்பிரானைப் போற்றிப் புகழ்ந்து பாடுகின்றார். நீத்தல் விண்ணப்பத்தில் ஒரு பாடலில் தன் குறையை இரண்டு வரிகளிலும் இறைவன் புகழை நான்கு வரிகளிலும் பாடுகின்றார். ஏன்?

பிறவிக் கடலை நீந்த வேண்டுமே! நீந்திக் கரையேற வேண்டுமே! அதுவும் சாதாரணக் கடலா? பெருங்கடல்! அந்தக் கடலில் மலங்கள் ஐந்தின் சுழல்! அதில் சிக்கிக் கொண்டு மத்திடை அகப்பட்ட தயிர்போல் சுழலும் தன்னை இறைவன் கைவிடாமல் எடுத்தாள வேண்டுமே என்ற கவலையில் பாட்டுப் பிறக்கிறது.