பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமையமுடியாது; அமையக்கூடாது. தான் கருதும் குறிக்கோள்களின் காரணமாக ஒருவன் செய்யும் அறமல்லாத செயல்கள் அறமாகக் கருதப்பெறும். இஃது உலக வழக்கில் சிறப்புடையது. ஒரு நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்கச் செய்யப்படும் கொலைகள், கொலைகளாகக் கருதப்படுவதில்லை. இது வரலாறு புகழும் வீரம்; தியாகம்! அதுபோலத் தான் வழிவழியாக நடைபெற்று வரும் மாந்தரினத்தின் குறிக்கோளாகிய வழிபாட்டிற்கு இடையூறு செய்யக்கூடாது. வழிபாடு குறிக்கோள். குறிக்கோளுக்கு இடையூறு செய்தது குற்றம். குற்றத்திற்குத் தண்டனை கால்களை இழத்தல். அன்பின் மிகுதியால் பிறர் நன்மையுற- பலர் நன்மையடையச் செய்யப்பெறும் காரியங்கள் காட்சியளவில் கொடுமை போலவும் பாபம் போலவும் தோன்றினாலும், அவை கொடுமையும் அல்ல, பாபமும் அல்ல. காரணம் அன்பு; குறிக்கோள் வெற்றிபெறுதல். அங்ஙனமின்றி- அன்பு இல்லாமல் வரலாற்றுக்கும் மாந்தர் கூட்டத்துக்கும் பயன் இல்லாமல் செய்யப்படும் சில பணிகள் அறம்போலத் தோன்றினாலும் அவை அறம் அல்ல; குறியெதிர்ப்பு உடையன.

இந்த விசாரசருமர் பற்றி- சண்டேசுவரர் பற்றி மாணிக்கவாசகர் பாடிய திருப்பாடல் சிந்தனைக்குரியது.

மாணிக்கவாசகர் ‘தீதில்லை மாணி’ என்று தொடங்குகின்றார். ஆம்! விசாரசருமர் இளம் வயதினர். அவருக்குத் தீய பயிற்சி இல்லை! தீய பழக்கங்களும் இல்லை! தூய்மையான வாழ்க்கையுடன் வளரும் இளைஞர் விசாரசருமர். தந்தையின் தாளைத் தடிந்த கொலைகாரர் என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதே என்ற முற்காப்புணர்வுடன் ‘தீதில்லை மாணி’ என்றார். ‘தீதில்லை’ என்று மட்டும் பொருள் கொண்டால் தன் தந்தையின்- எச்சதத்தரின் காலை விசாரசருமர் தடிந்தது குற்றமும் இல்லை; தீமையும் இல்லை என்பதாகும். ஏன்? வழிவழி வளர்ந்து வந்துள்ள மரபுகளைக்