பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இயலும். ஏனெனில் ஏமாறுபவர்கள் மண்ணில்தான் அதிகம். பொருள் செய்தல், அரசியல், மதம், மந்திர தந்திரங்கள் முதலிய அனைத்துத் துறைகளிலும் இன்று நடிப்பு புகுந்து விளையாடுகிறது. இன்று நமது நாட்டில் சோஷலிசம் என்பதே நடிப்பாளர்களின் மந்திர மொழிபோல் விளங்குகிறது. நடிப்பு, போலியானது; பொய்ம்மையானது. நிர்வானமான சுயநலத் தன்மையுடையது. நடிப்பின் விளைவு துன்பம்; துயரம்; எதிர் விளைவு சமுதாயச் சீரழிவு. குற்றங்கள், குறைகள் உடையதாக இருப்பது பாபமல்ல. இவற்றை நடித்து மறைப்பதுதான் குற்றம். நியாயப்படுத்துவதுதான் குற்றம். தவறுகள் செய்துவிடுவது பாபம் அல்ல. ஆனால் தவறுகளே செய்யவில்லை என்று நடிப்பது- உண்மைக்குப் புறம்பாக பேசுவது- நடப்பது இவைதான் பெருந் தீங்கு செய்யும். ஆதலால், மண்மீது பொய்யினை மறைத்துக் கொள்ளும் நடிப்பு வேண்டாம். ஆனால், மாணிக்கவாசகர் “நடிக்கவும் வேண்டும்” என்கிறார். பொய்யை மறைக்கும் நடிப்பு அல்ல. உண்மையை அடைய ஆர்வம் கொள்ளும் பத்திமை நடிப்புத் தேவை. “நடிக்கின்றிலை” என்பார்.

இங்ஙனம் மண்ணிடை நடித்தும்; வினை விளைவின் பயன் என்றும் திரிகின்ற ஆன்மாவை என்ன செய்வது? ஒரு ஆன்மா பைத்தியம்போலத் திரிந்தால் தாயிற் சிறந்ததயாவுடைய சிவத்துக்கு இழுக்கல்லவா? சிவத்தின் படைப்பில் ஆன்மாக்கள் இப்படித் திரிந்தால் உலகம் பழி தூற்றாதா? சந்தி சிரிக்க வைக்காதா? ஆதலால், சிவம் திரியும் ஆன்மாவைப் பிடிக்கிறான், பிடித்து நிறுத்துகிறான். திரியும் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறான். தன்னுடன் பிணைத்துக் கொள்கிறான். சிவத்துக்கு ‘நடுதறி’ என்று ஒரு பெயர் உண்டு. அப்பரடிகள் திருத்தாண்டகத்தில் “கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே” என்றார். ஆன்மாவைச் சிவத்துடன் இணைத்துப் பிரியாமல் கட்டிப்போடுவது கட்டுத் தறி! பாரதம், சகாதேவன் கண்ணனைக் கட்டினான் என்று கூறுவதை ஓர்க.