பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 8.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவாசகத் தேன்

75


கலந்த நன்மையை-தீமையாக உள்ளதை நன்மையாக மனிதர் அறியாமையால் கருதுகின்றனர். இறைவன் முற்றாக நன்மை. ஆதலால், மனிதர்கள் யானை தன் தலையில் மண்ணை யள்ளிப் போட்டுக் கொள்ளுதல் போலத் தங்களுக்குத் தாங்களே தீமை செய்து கொள்கின்றனர். ஆதலால், மனிதருக்கு வரும் துன்பம், பிறர் செய்ததன்று, தீதும் நன்றும் பிறர்தர வாரா! கடவுள் தந்ததுமன்று! எல்லாம் அவரவர் செய்து கொள்வதே! யானை தலையில் புழுதி அள்ளிப் போட்டுக் கொண்ட கதைதான்!

அடுத்து யானை தன்னைக் கட்ட, சங்கிலியைத் தானே எடுத்துப் பாகனிடம் கொடுக்கும். அதுபோல மனிதன் தன்னைத்தானே வினைக் கட்டுகளுக்கு உட்படுத்திக் கொள்கிறான். ஆன்மாவின் முதற் பிறப்பு கருமேனி கழிக்க வந்த பிறப்பே! அறியாமை அகல இறைவன் அருளிச் செய்த பிறப்பே! அற்புதமான பிறப்பு. அறிவுக் கருவிகள் செயற் கருவிகள் இணைந்த மகத்தான தோற்றம் “வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்!” என்பது திருமுறை. ஆயினும் என்? உயிர்கள் தற்சார்பு, தன்முனைப்பு காரணமாக ‘நான்’, ‘எனது’ என்ற செருக்கின் வழியாக இருவினை பெருக்கி அல்லற்பட்டு உழல்கின்றன. வினைகட்டு-வினைத் துன்பம் உயிர்களின் ஈட்டம்! அவரவர் வினைவழி அவரவர் வந்தனர். எவர் எவர்க்கு உதவினர்? எவர் எவர்க்கு உதவிலர்? என்றெல்லாம் சிந்திப்பது தவறு. உயிர்கள் தமக்குத் தாமே யானையைப் போலக் கட்டுக்களைப் போட்டுக் கொள்கின்றன.

இவையெல்லாம் போகட்டும்! யானைக்குத் தன் மேல் யானைப் பாகன் இருந்து செலுத்துகிறான் என்பது தெரியுமா? உணருமா? தெரியாது! உணராது! அதுபோலத்தான் உயிர்களுக்கு! உயிர்களின் உயிருக்குள் உயிரதாக இருந்து விளங்கி உயிர்களை இயக்கிடும் கடவுளைப் பலர் அறியார்; உணரார். கடவுள் உயிர்க்குக் கருவாக, உயிராக