பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 9.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சேக்கிழார் செந்நெறி

209


அவர்கள் வயிற்றுக்காக வணங்குபவர்கள் அல்லர்; முகமனுக்காக வணங்குபவர்கள் அல்லர். ஞானத்தின் முதிர்ச்சியிலேயே உண்மையான வணக்கம் முகிழ்க்கிறது. இத்தகைய ஞானிகள் நாட்டின் மழைக்கு உதவுவார்கள். மாண்பினைச் சேர்ப்பார்கள். இவர்களே சான்றோர்கள். இத்தகு சான்றோர்கள் பல்கி வளரும் நாட்டிலேயே நரையிலா வாழ்க்கை கிடைக்கும்.

நாட்டிலுள்ள உழவர்கள் உழைத்துப்பொருள் சேர்க்கின்றனர். அரசுக்கு உரிய கடமையைச் செலுத்துகின்றனர். பழந்தமிழகத்தில் அது வரியல்ல. கடமை உணர்வுடன் செலுத்தப்பெறும் கடன். அரசுக்குத் தருவதை மகிழ்வுடன் முந்தித் தருவது முன்னோர் வழக்கம். அரசுக்குரிய வரியைச் குறைத்துக்காட்ட இரட்டைக் கணக்குமுறை இருந்ததில்லை; இருக்கக் கூடாது. காவிரி நாட்டு மக்கள் அரசுக்குரியன வற்றைக் கடமையெனக் கருதித் தந்தனர். அறங்கள் பல செய்தனர். கடவுளைப் போற்றினர்; ஆசிரியருக்கு அளித்தனர்; விருந்திற்கு வழங்கினர்; உற்றார் உறவினரைப் பேணிப் பாதுகாத்தனர். ஏன்? ஆட்சித் தலைவன் அநபாயனின் கொற்றக்குடை வெய்யில் மறைக்கும் குடையன்று. சமுதாயத்தைக் காப்பதில் தாய் குழந்தையைக் காப்பது போன்ற தண்ணளிக் குடையாக விளங்கியது. இஃது ஒரு சிறந்த நாட்டின் சமுதாய வாழ்க்கை.

இத்தகைய வாழ்க்கை சமுதாயத்தில் கால்கொள்ளு மானால், அங்கு இயல்பாகவே இன்றைய சோஷலிசத் தத்துவம் விளங்கித் தோன்றும். இந்த வாழ்க்கை முறையில் மாறுபாடுகள் தோன்றியதால் வளம் குறைந்துள்ளது; வறுமை பெருகியுள்ளது. அரசு வலிய ஏவலர் வைத்து அச்சுறுத்தி, கட்டாயப்படுத்தி வாங்குகிறது. திருக்கோயில்கள் கட்டாய மான கட்டணம் வைத்து வசூலிக்கின்றன. ஆசிரியருக்கு அரசு சம்பளம் வழங்குகிறது. சமுதாயம் நேரிடையாக வழங்கவில்லை விருந்தினர்கள் வீட்டுக்கு வருவதில்லை.